அன்புமணி சொல்லும் பொய்!: காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவிடம் பாஸ்போர்ட் இல்லை என்று பா.ம.க.  இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்  பொய் கூறுவதாக குருவின் ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பதிந்து வருகிறார்கள்.

வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்ற கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்த நிலையில், “வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு. பா.ம.க.வின் முக்கிய தூணாக விளங்கினார். ஆனால் அவரது சிகிச்சைக்கு பாமக நிறுவனர் ராமதாஸோ அவரது மகன் அன்புமணி எம்.பி.யோ உதவவில்லை” என்று  சிலர் புகார் கூறி வருகிறார்கள்.

இதற்கு விளக்கம்கொடுக்கும் வகையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, “காடுவெட்டி குருவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டோம். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில்  பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் “2025ம் ஆண்டு வரை செல்லத்தக்க பாஸ்போர்ட் காடுவெட்டி குருவிடம் இருந்தது. அன்புமணி பொய் கூறுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் காடுவெட்டி குருவின் பாஸ்போர்ட் படங்களையும் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் சிலர்,”காடுவெட்டி குருவிடம் பாஸ்போர் இருந்திருக்கலாம். ஆனால் 2008ல் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது” என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிலர், “குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் காடுவெட்டி குருவின் பாஸ்போர்ட் முடக்கப்படவில்லை. ஒரு வாதத்துக்காக அப்படி வைத்துக்கொண்டாலும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் கிடைக்குமே. அதற்கு ஏன் அன்புமணி முயற்சி செய்யவில்லை” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

கார்ட்டூன் கேலரி