சென்னை: 

பாமகவில் பிரிந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்தி வரும் வேல்முருகன் கட்சியில், முன்னாள் பாமக தலைவர் காடுவெட்டி குருவின் சகோதரி மற்றும், சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் இன்று வேல்முருகன் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தனர். இது பாமக தலைவர் ராமதாசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பாமக எம்எல்ஏவாக இருந்தவர் வேல்முருகன். இவர் கடந்த 2011ம் ஆண்டு பாமகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 2012ம் ஆண்டு  தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனும் புதிய கட்சி யைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது கட்சியில் பாமகவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த தலைவர்கள், தொண்டர்கள் என எராளமானோர் இணைந்து வருகின்றனர். இதன் காரணமாக பாமகவுக்கு மாற்றுச்சக்தியாக வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி விஸ்வரூபமெடுத்து வருகிறது.

இந்த நிலையில், காடுவெட்டி குரு மறைவுக்கு பிறகு பாமகவில் மீண்டும்  பூசல் தொடங்கி உள்ளது. காடுவெட்டி குரு மறைவுக்கு ராமதாஸ்தான் காரணம் என்று அவரது குடும்பத்தினரே குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததும் பாமகவினர் மத்தியில்  கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. பலர் தலைமைக்கு எதிராக விமர்சித்து வருகின்றனர். ஒருசிலர் பாமகவில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில்,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு,  வேல்முருகன் முன்னிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு வேல்முருகன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

அப்போது பேசிய வேல்முருகன், காடுவெட்டி குருவின் ஒட்டுமொத்த கடனையும்   தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக, நாங்களே அடைப்போம் என்றவர், வீரப்பனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  உறுதியளித்தார்.