கடனில் தத்தளிக்கிறது காடுவெட்டி குருவின் குடும்பம்! டெம்போ டிராவலர் விற்பனைக்கு!

மீபத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் குடும்பம் கடனில் தத்தளிப்பதாகவும், கடனை அடைக்க குருவின் டெம்போ டிராவலர் வாகனத்தை விற்பனை செய்ய இருப்பதாகவும் முகநூலில் பலர் பதிவிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காடுவெட்டி குரு

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் காடுவெட்டி ஜெ.குரு.  பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ்.போல, பா.ம.க,வுக்கு வேராக இருப்பது வன்னியர் சங்கம். இச்சங்கத்தின் சக்திமிக்க தலைவராக வலம் வந்தவர் காடுவெட்டி ஜெ.குரு. சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

சமீபத்தில் உடல் நலக்குறைவுகாரணமாக இவர் மறைந்தார். அப்போதே, “குருவுக்கும் பா.ம.க.  நிறுவனத்தலைவரான ராமதாசின் மகனும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான  சிகிச்சை பெற பா.ம.க. உதவவில்லை” என்று ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் இதை பா.ம.க.வினர் மறுத்தனர்.

குருவின் தங்கை மகன் நாகராஜன் கருணாகரன் முகநூல் பதிவு

“காடுவெட்டி குரு என் மகனைப் போன்றவர்” என்று ராமதாஸ் சொல்வது உண்டு.

அப்படி இருந்தும், “காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் பெரும் கடனில் தத்தளிக்கிறது” என்ற தகவல் பரவியது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் குடும்பத்தாருடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலமாக அது உறுதியாகியிருக்கிறது.

குருவின் தங்கை குடும்பத்தைச் சேர்ந்த நாகராஜன் கருணாகரன் என்பவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், “கடன் சுமைக் காரணமாக எங்கள் மாமாவின் ( வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு) டெம்போ டிராவலர் வண்டியை விற்பனை செய்ய குடும்பத்தில் முடிவு எடுத்துள்ளோம். வீட்டுக் கடன் ரூ 19 லட்சம் மற்றும் டெம்போ டிரவலர் வாகன கடன் ரூ. 7 லட்சம் இருப்பதாலும் வங்கியில் கடனை திருப்பிச் செலுத்த குறுகிய அவகாசமே இருப்பதாலும் வேறுவழியின்றி விற்க முடிவெடுத்துவிட்டோம்.

இந்த வாகனத்தை வாங்க ஆர்வமுள்ளவர்கள் 9677402307 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் உதவி செய்ய விரும்புவோர்கள் காடுவெட்டிக்கே நேரில் வந்து எங்கள் குடும்பத்தாரை சந்தித்து உதவி செய்யுங்கள் அல்லது கீழே உள்ள வங்கி கணக்கு எண்ணில் உதவி செய்யலாம். வங்கி கணக்கு விபரம் ஜெ.குரு இந்தியன் வங்கி எம்.எல்.ஏ, விடுதி கிளை கணக்கு எண் 475325564” என்று பதிவிடப்பட்டிருந்தது.

குரு மறைந்த இரண்டாவது வாரத்தில் குருவின் படத்திறப்பு நிகழ்வு நடந்தது. அதில்  கலந்துகொண்ட அன்புமணி, “அண்ணன் குரு பெயரில் உள்ள கடன்களை அனைத்தும் நான் ஏற்றுக்கொள்கிறேன் அதற்காக வங்கியிலும் பேசிக்கொள்கிறேன்” என்றார்.

இந்த நிலையில்தான், குரு குடும்பம் கடனில் தத்தளிக்கும் விவகராம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பா.ம.க. மாநில நிர்வாகிகளுள் ஒருவரான க.வைத்தி ஒரு அறிக்கைவிடுத்தார்.

“விஷமிகளுக்கு எச்சரிக்கை..” என்கிற தலைப்பிலான அந்த அறிக்கையில், “மாவீரன் (குரு) அவர்களின் புகழுக்கும்,பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.. கடந்த 15-ம் தேதி காடுவெட்டியில் நடைபெற்ற மாவீரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மாவீரன் அவர்களின் வீட்டுக்கடன்,வங்கிக் கடன்களையும், குழந்தைகளின் படிப்பு,வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும் அறிவித்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.. கண்டிப்பாக செய்வார்கள்.. இதுபோன்ற விஷமத்தனமான பதிவுகளை பதிவிடாதீர்கள்,நம்பாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

விற்பனைக்காக அறிவிக்கப்பட்ட குருவின் வாகனம்

குருவின் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் “இரண்டு மூன்று நாட்களில் இது குறித்து பேசுகிறோம். இப்போது வேண்டாம்” என்றார்கள்.

நமது தொடர் முயற்சியில் குருவின்  குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் தங்கள் பெயரை வெளிப்படத்த வேண்டாம் என்ற கோரிக்கையோடு நம்மிடம் பேசியவர்கள், “குருவின் குடும்பம் கடனில் தத்தளிப்பது உண்மைதான். அவரது சிகிச்சைக்கே பெரும் தொகை செலவாகிவிட்டது. தனக்கென்று ஏதும் சேர்த்துவைக்காமலயே மறைந்துவிட்டார் குரு. இப்படி தன்னலமற்று செயல்பட்டதுதான் அவர் செய்த தவறு” என்றார்கள் வருத்தத்துடன்.