Random image

கோரக்பூர் ஆக்சிஜன் விவகார மருத்துவரின் சகோதரர் மீது துப்பாக்கி சூடு

கஃபீல் கான்

கோரக்பூர்

கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகள்  இறந்ததற்கு பொறுப்பு என குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் தம்பி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் உ.பி. கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைந்தனர்.   அப்போது அந்த மருத்துவமனையின் மருத்துவர் கஃபீல் கான் தனது சொந்த முயற்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.   ஆனால் உ.பி.  அரசு அதை மறுத்தது.

மேலும் குழந்தைகள் மரணம் அடைந்தத்தற்கு கஃபீல் கானின் கவனக் குறைவே காரணம் எனக் கூறிய அரசு அவரை பணியிடை நீக்கம் செய்தது.     காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கஃபீல் கான் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

அது முதலே கஃபீல் கான்  தன்னைக் கொலை செய்ய சிலர் திட்டமிட்டுள்ளதாகவும்,  தாம்  கொலை செய்யப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போது கஃபீல் கானின் இளைய சகோதரர் துப்பாக்கியால் இருமுறை சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது இரு குண்டுகள் பாய்ந்துள்ளது.  அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு குறித்து விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.