தமிழகத்தை விட்டு வெளியேற மறுக்கும் ‘கஜா’ திண்டுக்கல் அருகே மையம்

சென்னை:

நாகை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் இன்று அதிகாலை கரையை கடந்த கஜா புயல், தற்போது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ள கஜா புயல் தற்போது திண்டுக்கல் அருகே மையம் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திண்டுக்கல், மதுரை, கொடைக்கானல் பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது.

கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது மணிக்கு 23 கி.மீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்து செல்வதாக தெரிவித்துள்ள வானிலை மையம், இதன காரணமாக காற்று மற்றும் மழை பெய்யும் என்றும் தெரிவித்து உள்ளது.

திண்டுக்கல், கரூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மேலும், 3 மணி நேரத்தில் கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

கஜா புயலின் எதிரொலியாக தென் மாவட்டங்களிலும் குறிப்பாக மதுரை, சிவகங்கை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்துள்ளது , இனி உள் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் கஜா வலு குறைந்து அரபிக்கடல் நோக்கி செல்லும் போது கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும் வானிலை ஆய்வு மைய இயக்குனர்  கூறி உள்ளார்.

கஜா புயல் காலை 11:30 மணியளவில் வலு குறைந்து தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாகவும், நாளை அரபிக் கடலை நோக்கிச் செல்லும்  என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து வரும் 18ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக மதுரை – காரைக்குடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. கஜா புயல் கரையை கடந்த நிலையில், அறந்தாங்கி அடுத்த கோட்டைபட்டினம், புதுப்பட்டினத்தில் கடல் உள்வாங்கி உள்ளது.