கஜா புயல் பாதிப்பு: ஸ்டெர்லைட் நிறுவனமும் நிவாரண உதவி

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகமும் நிவாரண உதவி செய்துள்ளது.

கடந்தவாரம் வீசிய கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பது பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் விழுந்துவிட்டன.

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை போன்ற நகரப்பகுதிகளில் மட்டும் மீண்டும் மின் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் புயல் பாதித்த பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னமும் மின்சார வசதி ஏற்படுத்த முடியவில்லை.  லட்சக்கணக்கான மக்கள், உணவு, குடிநீர் இன்றி தவிக்கிறார்கள்.

அரசு நிவாரணப்பணிகளை மேற்கொண்டாலும் அது போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தன்னார்வத்துடன் பலரும் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களுடன் வந்து உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒரு வாகனத்தை அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பொருட்களை அளித்துள்ளது.

இதற்கு மக்களிடையே எதிர்ப்பும் உள்ளது. “ஸ்டெர்டலைட் ஆலைதான் தூத்துக்குடி பகுதி மாசடைய காரணம். இதை எதிர்த்து போராடியவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதற்கும் காரணம் இந்த ஆலை நிர்வாகம்தான். தவிர இதே ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம்தான், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் உரிமத்தை பெற்றுள்ளது. ஆகவே அந் நிர்வாகம் அளிக்கும் நிவாரணப்பொருட்களை வாங்காதீர்கள்” என்ற பிரச்சாரமும் நடந்துவருகிறது.

#kaja #storm #damage #Sterlite #helps #relief