கஜா புயல் எச்சரிக்கை: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

சென்னை:

சென்னை உள்பட பல மாவட்டங்களை கடுமையாக தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள கஜா புயல் காரணமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் மற்றும் சென்னை வானிலை மையம், கஜா புயல் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக சூறைக்காற்றுடன் பயங்கர மழை பெய்யும் என்றும் எச்சரித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்க மணி, சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  மாநில பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, கஜா புயல் காரணமாக   எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புயல் காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சேதமடைந்தால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,  மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்,  பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது குறித்தும், அவர்கள் தங்குவதற்கபன தற்காலிக நிவாரண முகாம்கள் பள்ளிகளில  அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை மீண்டும்  தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.