மிரட்டும் ‘கஜா’: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை?

சென்னை:

ங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் மிகவும் தீவிரமாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், சென்னை கடலூர் உள்பட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றும் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுப்படுவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

தற்போது சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 740 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 840 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ள கஜா புயல்,  மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தமிழகம் நோக்கி வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 15ம் தேதியன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக  இன்று நண்பகல் முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகங்களில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்புடன் வைக்குமாறு தமிழக மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கஜா புயல் நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், அவசரம் அவசரமாக கரை திரும்பி வருகின்றனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பால், நாகப்பட்டினம் முகத்துவாரத்தில் மணல் திட்டு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  கடலூர் , விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய  8 மாவட்ட பள்ளிகளுக்கு பாதுகாப்பு கருதி  அரசு விடுமுறை விடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

விரைவில் விடுமுறை குறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்….