மீண்டும் வேகமெடுக்கும் ‘கஜா’: நாகை, பாம்பனில் கடல் உள்வாங்கியது…

சென்னை:

மிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் வேகம் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் வேகம் மீண்டும் அதிகரித்து வருவதாக இன்று காலை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

நேற்று மாலையில் இருந்தே குறைவான வேகத்திலேயே கஜா புயல் பயணித்து வந்தது. இன்று அதிகாலை  காலை முழுக்க 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில் அதன் வேகம்14 கிலோ மீட்டராக இருந்த நிலையில், 10 மணி அளவில் 23 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடக்கத்தில் இருந்தே கஜா புயலின் வேகம் கூடியும், குறைந்தும் மக்களையும் வானிலை மையங்களையும் குழப்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கஜா புயல் காரணமாக சென்னை உள்பட தமிகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில்  150 அடி தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கி உள்ளது.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதுபோல ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியில், லேசாக கடல் உள்வாங்கி காணப்பட்டதாகவும், பல இடங்களில்  கடல் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக காட்சியளித்து வருவதாகவும் மீனவர்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளனர்.

கஜா புயல் இன்று பிற்பகல் அல்லது இரவு கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.