ஒரு குழந்தையை தத்தெடுக்க உங்கள் உதவி தேவை: லாரன்ஸுக்கு காஜல் பசுபதி கோரிக்கை

குழந்தை ஒன்றை தத்தெடுக்க உதவி செய்யுமாறு நடிகை ஒருவர் இயக்குநர் லாரன்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், கள்வனின் காதலி, கோ, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் காஜல் பசுபதி, பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவருக்கும் நடன இயக்குநர் சாண்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும் அதற்கு லாரன்ஸ் உதவ வேண்டும் என்றும் தனது சமூகவலைதள பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார் காஜல் பசுபதி.

இது தொடர்பாக அவர் மேற்கொண்டுள்ள பதிவில், “உங்கள் தொடர்பு எண் தவறிவிட்டது லாரன்ஸ் மாஸ்டர். நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். வாழ்க்கை ஒரு குழந்தையில்லாமல் முழுமையடையவில்லை. குழந்தை தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியமும் அல்ல. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உங்களது உதவி தேவை. அந்தக் குழந்தையின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தால் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் மரணமடைந்த போது கருத்துப் பதிவிட்டிருந்த இயக்குநர் லாரன்ஸ், ஒரு குழந்தையை தத்தெடுத்து சுர்ஜித் என்று பெயரிட்டு வளர்க்குமாறு அவரது பெற்றோருக்கு கோரிக்கை வைத்தார். அவ்வாறு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அதற்கு தான் உதவுவதாக தெரிவித்திருந்த லாரன்ஸ், அந்தக் குழந்தைக்கான முழு படிப்பு செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

கார்ட்டூன் கேலரி