கஜா புயல் தாக்கிய இரவில் பிறந்த கஜஸ்ரீ: டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்த பிரசவம்

ஜா புயல் தாக்கிய இரவு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு கஜஸ்ரீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மழை பெய்ய.. மின்சாரமும் இல்லாத நிலையில்.. சாதாரண விளக்கொளியில் பிரசவம் நடப்பது போன்ற காட்சிகள் பல திரைப்படங்களில் இடம்பெற்றது உண்டு. அதே போன்ற ஒரு சம்பவம் நாகப்பட்டினத்தில் நடந்துள்ளது… அதுவும் புயல் இரவன்று!

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நாகை – வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையை கடந்தது. இதனால் நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.  ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்தனர். லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. அதனால் இந்த மாவட்டங்களில் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டது.

அந்த இரவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றிருக்கிறது.

நாகப்பட்டினம் தெற்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. நிறைமாத கர்ப்பிணி. கஜா புயல் எச்சரிக்கை விடப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக கடந்த வியாழன் கிழமை தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.

அடுத்த நாள் மஞ்சுளாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. வேறு வழி இல்லாமல் மருத்துவர் டார்ச் மற்றும் மொபைல் போன் வெளிச்சத்தில் மஞ்சுளாவுக்கு  பிரசவம் பார்த்தார்., மஞ்சுளாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு, புயலின் நினைவாக கஜஸ்ரீ  என பெற்றோர் பெயர் சூட்டினர்.

இதுகுறித்து மஞ்சுளா, “மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது.  மருத்துவமனையில் ஜன்னல் வழியாக மழை நீர் உள்ளே புகுந்துவிட்டது.  மின்சாரமும் இல்லை.  இதனால் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மஞ்சுளாவிற்கு ஏற்கனவே 2 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உண்டு. அந்தக் குழந்தையும் இதே ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் பிறந்தார் என  மஞ்சுளாவின் கணவர் ரமேஷ் கூறினார்.

#’Kajasree’ #Ghazi #storm :#delivery #torchlight