கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பிரமாண்ட காளி சிலை

திருப்போரூர்:

ரே கல்லில் 18 கைகள் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள காளிதேவியின் பிரமாண்ட சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக சிற்பகலை கூடம் நடத்தி வருபவர் முத்தையா ஸ்தபதி. இவருடன் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு அம்மன், விநாயகர் என்று பல்வேறு சாமி சிலைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் திரிபுரந்தாக்கம் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா கபாலிக் தப்போ சித்தா ஆசிரமத்தில் வைப்பதற்காக 21 அடி உயரத்தில் பிரமாண்டமான காளிதேவி சிலை செய்ய முத்தையா ஸ்தபதியை அணுகினர்.

அவர் 10-க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களைக் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள பெரிய கருங்கல்லை கொண்டு பிரமாண்ட காளி சிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

கொரோனா ஊரடங்கால் பணிகள் பாதியில் நின்றது. இதனால் காளி சிலையை வடிவமைக்கும் பணி 2 ஆண்டுகளை கடந்து சென்றது. ஒரே கல்லில் 18 கைகள் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள காளிதேவியின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து முடித்தனர்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை அந்த சிலையை 5 கிரேன்கள் கொண்டு லாரியில் ஏற்றி ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற 1-ந்தேதி அந்த சிலையை ஆசிரமத்தில் வைத்து வழிபட உள்ளனர். காளி சிலையை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.