சென்னை

மாமல்லபுரத்தில் நடைபெறும் சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் சந்திப்பில்  சென்னை கலாசேத்திரா மாணவர்கள் நடனமாட உள்ளனர்.

                                                            மாதிரி புகைப்படம்

நாட்டின் மிகப் பழமையான கலாச்சார மையங்களில்  ஒன்றான கலாசேத்திரா சென்னை அடையாற்றில் அமைந்துள்ளது.   மறைந்த ருக்மணிதேவி அருண்டேல் தொடங்கிய இந்த கலாச்சார மையத்தில் இந்தியாவின் நாட்டியம், இசை போன்ற கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.   தற்போது இந்த மையத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் நிர்வகித்து வருகிறது.

கடந்த 1980களில் ரஷ்யாவில் இந்தியத் திருவிழா மாஸ்கோ நகரில்  உள்ள கிரெம்லின் சதுக்கம் பகுதியில் நடந்தது.   அந்த விழாவில் கலாச்சேத்திரா பங்கு பெற்றுள்ளது.    அந்த நிகழ்வில் ஒன்றாகப் பிரபல பரதநாட்டியக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான சுகன்யா ரமேஷ் நாட்டியம் ஆடி உள்ளார்.    கடந்த வருடம் சென்னையில் கலாசேத்திரா மாணவர்கள் காந்தியடிகளின் 150 ஆம் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்வை நடத்தினர்.

தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பின் முதல் நாளில் கலாசேத்திரா மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.    சுமார் 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் மாணவர்கள் ஒரு பெரிய பாடலுக்கும் இரு சிறிய பாடல்களுக்கும் பரதநாட்டியம் ஆட உள்ளனர்.  அத்துடன் மதியம் பார்வையற்ற கலாசேத்திர கலைஞர் ஒருவரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.