திரை விமர்சனம் : களத்தூர் கிராமம்

ங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ’குற்றப்பரம்பரை’யினர் என முத்திரைக் குத்தப்பட்ட ‘கள்ளர்’ சமூகத்தின் கதையை ”நாந்தேன் படமெடுப்பேன்.. நாந்தேன் படமெடுப்பேன்…” என்று இயக்குனர்கள் பாரதிராஜாவும் பாலாவும் ’மைக்’கடி சண்டை நடத்திக் கொண்டுள்ள நிலையில், இங்கே ஒருவர் சந்தடி சாக்கில் படமெடுத்துள்ளார், அல்லது முயற்சித்துள்ளார்.

மொத்த தமிழ் சினிமா  ரசிகர்களும் மெர்சலின் நெர்சலில் சிக்கி இன்னமும் வெளிவந்திராத சூழலில் எவ்விதமான ஸ்டார் வேல்யூவும் இல்லாத இந்த படத்தை எந்த தைரியத்தில் வெளியிட துணிந்தார்கள் என்று யோசித்தபடியே தியேட்டருக்குள் சென்றால், படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதற்கான காரணம் புரிகிறது.

இரண்டு காரணங்கள்.  இசைஞானி இளையராஜா மற்றும் படத்தின் கதை.

ஆளரவமற்ற புதர்க்காட்டில் ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது. அதிலிருந்து நான்கு கைதிகளை நெட்டித் தள்ளி இறக்கும் போலிசார் அந்நால்வரையும் என்கவுண்ட்டர் செய்கிறது. அதைத் தொடர்ந்து, அவலமும் துயரமும் கலந்த ஒரு பெண் குரலின் அபாரமான ஓலம் ஒன்று ஒலிக்க… டைட்டில் போடப்படுகிறது இந்த முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்து ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறார் இயக்குனர். அந்த எதிர்ப்பார்ப்பை சில இடங்களில் பூர்த்தி செய்து, சில இடங்களில் சலிப்பூட்டி, சில இடங்களில் வெறுப்பேற்றி… என்று கலவையான உணர்வுகளை உருவாக்குகிறார் இயக்குனர்.

சரி படத்தின் கதைக்கு வருவோம். எண்பதுகளில் நடக்கிறது.

டைட்டிலிலேயே சொல்லிவிட்டபடியால் ஊர் பெயர் களத்தூர். தமிழக ஆந்திர எல்லையில் இருப்பதாகச் சொல்லப்படும் அந்த கிராமத்தில் காவல் துறையினர் நுழையவே முடியாதபடி ஒரு கட்டுப்பாடு. அப்படிப்பட்ட கிராமத்திலிருந்துதான் நான்கு பேரை முதல் காட்சியிலேயே போலிசார் என்கவுண்ட்டர் செய்கிறார்கள். அந்த நால்வரையும் காணவில்லையென மனு கொடுக்கும் அந்த கிராமத்து மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு நீதிபதியின் தலைமையில் விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையின் போக்கில் படத்தின் கதை விரிகிறது.

வழிப்பறித் தொழிலைச் செய்பவர்களான கிடாத்திருக்கனும் வீரண்ணனும் நண்பர்கள். இவர்களில் கிடாத்திருக்கன் கிராமத்தின் மதிப்பு மிகுந்தவன். வீரண்ணன் ஒரு ’பெண் சோக்காலி’. ஒரு கட்டத்தில் இவர்கள் வழிப்பறித் தொழிலை விட்டு விட்டு,  கரிமூட்டம் போடும் தொழிலைச் செய்து கவுரவமாக வாழலாம் என முடிவெடுக்கின்றனர். ஆனால், அந்த தொழிலை முடக்க நினைக்கிறார் ஆந்திர பகுதியைச் சேர்ந்த ராவ் ஒருவர். இதன் மூலம் அவர்களுக்குள் பகை. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் சோக்காலியான வீரண்ணனுக்குப் பெண் பார்க்கப் போகும் போது யாரோ ஒரு பெரியவரின் பேத்தியை ஆந்திர ராவ் கடத்தி வைத்திருப்பதாகவும் கிடாத்திருக்கன் வந்து காப்பாற்றித் தரும்படியும் கெஞ்சுகிறார். உடனே கிடாத்திருக்கன் அந்த ராவைத் தேடிச் சென்று அடித்து, செல்வம்பாள் என்ற அந்த பெண்ணைக் காப்பாற்றி சூழ்நிலையால் அவளை கல்யாணமும் செய்து  கொள்கிறான்.

இன்னொரு பக்கம் வீரண்ணனின் திருமணம் நின்று போகிறது. ஆந்திர போலிசார் கிடாத்திருக்கனைக் கைது செய்கிறது. அவன் தன் மனைவியை வீரண்ணனிடம் ஒப்படைத்து விட்டு ஜெயிலுக்குப் போகிறான். கல்யாணம் நின்று போன வெறுப்பிலிருக்கும் வீரண்ணன் தன் நண்பனின் மனைவியைத் தன்னுடைய மனைவி என்று ஊரை நம்ப வைக்கிறான். ஜெயிலிலிருந்து திரும்பும் கிடாத்திருக்கன் வீரண்ணனுடனான மோதலில் வீரண்ணனை கொன்று விடுகிறான்.

செல்வாம்பாளுக்குப் பிறக்கும் மகன், வீரண்ணன்தான் தன் தகப்பன் எனவும், தன் அப்பனைக் கொன்ற கிடாத்திருக்கனைப் பழி வாங்குவதே தன் வாழ்வின் லட்சியம் என்று வளர்கிறான். கடைசியில் அவன் அப்பனைக் கொன்றானா இல்லையா என்பதை….

பழைய காலத்துப் பாட்டுப் புத்தகத்தில் போட்டிருப்பார்களே அதன்படி, மீதியை வெண்திரையில் காணவும். (முடிந்தால்)

என்னடா கதை இவ்வளவு நீளமாக இருக்கிறதே இதை ரெண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியுமா என்கிற நினைப்பு உங்களைப் போலவே எனக்கும் எழாமல் இல்லை. ஆனால், இந்த இடத்தில் தான் இயக்குனரின் சாமர்த்தியம் தெரிகிறது. கலாம்புலாம் எனவும் வதவதவெனவும் எடுக்கப்பட்ட காட்சிகளை சிறப்பான எடிட்டரைக் கொண்டு ஒப்பேற்றி விடலாம் என்பதுதான் அந்த சாமர்த்தியம். எடிட்டர் சுரேஷ் அர்ஸ். நான் லீனியர் முறையில் எடிட் செய்து படத்தை ஓரளவுக்கு சுவாரசியமாக்க முயற்சிக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்..

படத்தின் ஒளிப்பதிவாளரான புஷ்பராஜ் சந்தோசும் பெரிய குறைகளின்றி படமாக்கியுள்ளார். ( சரி.. அதென்ன ’பீரியட்’ கதையென்றால் உடனே செஃபியா டோனுக்கு கலரை மாற்றி விட வேண்டுமா என்ன? )

அடுத்து படத்தின் இசை. சமீபத்தில் ஏதோவொரு படத்தை முன் வைத்து (மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் என்று நினைக்கிறேன்) ”இளையராஜாவுக்கு பின்னணி இசையே தெரியல…” என்று சில ’ஃபேஸ்புக் இசை மேதாவிகள்’ பயங்கரமாக அவரை விமர்சித்ததைக் கண்டேன். பின்னணி இசையமைக்கும் போது, பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு “ எனக்கு இது மாதிரி வேணும் .. அது மாதிரி வேணும்..” என நொணத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அப்படித்தான் இசையைத் தருவார் போலிருக்கிறது..  கதையை இளையராஜாவிடம் ஒப்படைத்து விட்டால் அதன் ஜீவனுக்கேற்ப அவர் இசையமைத்த படங்களைக் கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். இதிலும்  காணமுடிகிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் அந்த அவலச்சுவை ததும்பும் பெண்ணின் குரல் ஒலி ஒரு உதாரணம் போதும். தவிரவும் பல காட்சிகளை கதையோடு ஒன்ற வைக்க பின்னணி இசைதான் பெரும் பங்களிக்கிறது. ஒவ்வொரு காட்சிகளுக்கேற்பவும் இசையமைக்காமல் படத்தின் கதையோட்டத்திற்கும் மனநிலைக்குமேற்ப  பின்னணி இசையமைப்பதில் ராஜா ராஜாதான்.

சமீப கால படங்களில் ராஜாவின் இசையை வேறு யார் யரோ பயன்படுத்தி வியாபாரமாக்கிக் கொண்டிருந்தார்கள் இல்லையா. (சுப்ரமணியபுரம், குக்கூ இத்யாதி..) இந்த படத்தில் ராஜாவே அவரின் பழைய பாடல்கள் ஓரிரண்டை படத்தின் காட்சிகளுக்கேற்ப பயன்படுத்தியிருக்கிறார். இயக்குனரின் விருப்பமகவும் இருக்கலாம். எண்பதுகளில் எல்லா கல்யாண வீடுகளிலும் ஒலித்த ”இது நம்ம வீட்டு கல்யாணம்” பாடலும், ’பத்ரகாளி’ படத்தில் வரும் ”வாங்கோண்ணா அட வாங்கோண்ணா..” பாடலையும் ஒரு  குத்தாட்டம் போல பயன்படுத்தியிருக்கிறார். எண்பதுகளில் நடக்கும் ஒரு கல்யாண காட்சிக்கு அந்த பாடல்கள் அழகாக பொருந்திப் போகின்றன. அதிலும் தெலுங்கு “ராவோண்ணா..அட ராவோண்ணா..” ரசிக்க வைக்கிறது.

அப்புறம் நடிகர்கள். கிஷோரைத் தவிர பெரும்பாலானவர்கள் புது முகங்கள். அதிலும் தொழில் முறையல்லாதவர்கள் என்பதை நிருபிக்கும் வகையான நடிப்பு. கிடாத்திருக்கனாக வரும் கிஷோர் தேர்ந்த நடிப்பை தருகிறார். படத்தின் பலங்களில் அவரும் ஒருவர்.  நீதிபதியாக வரும் அஜய் ரத்னமும் வீரண்ணனாக வருபவரும் குறிப்பிடத்தக்கவாறு நடித்துள்ளார்கள். கதா நாயகியாக வரும் நடிகையும் ( கொஞ்சம் கனிகா சாயல் – வரலாறு , எதிரி படங்களில் வருவாரே அவரேதான் ) ஓகே ரகம் தான்

கடைசியாக இயக்குனருக்கு வருவோம். சரண் கே. அத்வைதன்.

சுவாரசியமான ஒரு கதையை தேர்ந்தெடுத்தமைக்காக அவருக்கு பராட்டுக்கள். வழவழாவென காமெடிகளையும் பாடல்களையும் வைக்காமல் அளவுடன் தந்த வகையிலும் ஒரு நீட்னஸ் தெரிகிறது. ஆனால், தெளிவற்றதாகவும், ஒரு குவியத்தை நோக்கிப் பயணிக்காததாகவும் அமைத்திருக்கும் திரைக்கதைதான்  அவருடைய பெரிய மைனஸ். களப்பணியாற்றி தரவுகளைச் சேகரித்து விடலாம். பட் அவற்றை திரைக்கதையாக்குவதில்தான் ஒரு திரைக்கதையாசிரியரின் திறமை இருக்கிறது.

சரியான, தொழில் முறையல்லாத நடிகர்களின் அமெச்சூர் நடிப்பைக் கூட பட்ஜெட் என்று காரணம் சொல்லித் தப்பிக்கலாம். ஆனால் திரைக்கதை சரியாக இருக்க வேண்டுமல்லவா சார்?

“ நீ ஆம்பளன்னு நிருபிக்க உன் பொண்டாட்டி போதாதா.. அடுத்தவன் பொண்டாட்டி வேணுமா” ”சாமிக்குப் பக்கத்திலிருக்கும் பூசாரி சத்தியமானவனாவும் இருப்பான்னு நம்புனது தப்புதான்.. அவனும் சராசரி மனுசன்னு காட்டிட்டான்” மாதிரியான சில இடங்களில் வசனத்திற்காக ‘அட’ போட வைக்கிறார்.

கடைசியாக இயக்குனர் சார்க்கு முக்கியமான ஒரு கேள்வி?

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வில்லன் வருகிறார் இல்லையா? ஆயுதக் கடத்தல், பெண்களை பம்பாய்க்கு கடத்துதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்யும் அந்த வில்லனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா? பீமாராவ். ஆம். பீமாராவ் தான். ஆந்திராவில் ஏகப்பட்ட ’ராவ்’கள் இருக்கையில் உலக மேதைகளில் ஒருவரும் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவருமான பீமராவ் அம்பேத்கரின் பெயர்தான் கிடைத்ததா? அல்லது அம்பேத்கரிஸ்ட்களின் கண்டனங்களைத் தூண்ட வைத்து அல்ப விளம்பரம் தேடும் முயற்சியா?

ஒரு கேடுகெட்ட வில்லனுக்கு போகிற போக்கில் பீமராவ் என பெயர் வைக்கும் விதத்தில் இயக்குனர் யார் அவருடைய சாதிய அரசியல் எப்பேர்ப்பட்டது என்பது விளங்குகிறது. அதுசரி.. இது ’கள்ளர்’களின் கதை தானே!

தவிரவும், எண்பதுகளில் நடக்கும் கதையில் வரும் காவல் நிலையத்தில் காந்தி, நேரு, நேதாஜியின் படங்களைத் தெளிவாகக் காட்டும் இயக்குனர் டாக்டர் அம்பேத்கரின் படத்தை ஒரு இடத்திலும் காட்டவில்லை. இதிலிருந்து இயக்குனரின் அரசியலை சந்தேகமின்றி சந்தேகிக்க முடிகிறது.

ஒரு வில்லனுக்கு ’பீமராவ்’ என்கிற பெயரைச் சூட்டியிருக்கும் படத்திற்குக் கூட எவ்வித கேள்வியுமற்று நல்ல இசையை வழங்கும் இளையராஜாவுக்கு இன்னமும் சமூக அரசியல் தெரியவில்லை அல்லது தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்பதை என்னவென்று சொல்வது?

ம்ம்… ஏற்கனவே அவர் “ போற்றிப் பாடடி பெண்ணே “ பாடியவர் தானே.!

– அதீதன் திருவாசகம் .    

கார்ட்டூன் கேலரி