டில்லி:

திமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து, அறந்தாங்கி ரத்னசாபாதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்  உச்சநீதி மன்றம் சென்று தடை பெற்ற நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக  எம்எல்ஏக்களாக உள்ள  ரத்தினசபாபதி(அறந்தாங்கி), வி.டி.கலைச்செல்வன்(விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், அவர்களை அதிமுகவில் இருந்து நீக்க அதிமுக தலைமை முடிவெடுத்து சபாநாயகரிடம் புகார் மனு அளித்தது. அதையடுத்து, சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம்  நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சபாநாயருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பிரபு உச்சநீதி மன்றத்தை நாடாத நிலையில், அவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்றும், சபாநாயகருக்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கோருவார் என தகவல்கள் பரவின. இதற்கிடையில், நேற்று  சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்க மேலும்  அவகாசம் வேண்டும் என சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் பிரபு எம்.எல்.ஏ. மனு அளித்திருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தற்போது திடீர் ஞானாதோயமாக,   உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவர் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தனக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அதையடுத்து சபாநாயகர்  நோட்டீஸ் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.