மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறிவிக்கும் அரிய கருவி : கல்பாக்கம் அணு ஆய்வு மைய கண்டுபிடிப்பு

சென்னை

ல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள் மார்பக புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் அமைந்துள்ளது.  இங்கு அணு மின் உற்பத்தி மட்டுமின்றி பல மருத்துவ ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தற்போது மார்பக புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிந்துக் கொள்ள வசதியான விலை குறைந்த பாதிப்புக்கள் அற்ற கருவி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கருவி தெர்மோகிராபி எனப்படும் உடல் உஷ்ண தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது.  இந்த கருவியில் உள்ள இன்ஃப்ரா ரெட் சென்சார்கள் வெளியிடும் ஒளிக்கதிர்கள் புற்று நோய் செல்கள் மற்றும் சாதாரண செல்கள் இடையில் உள்ள உஷ்ண வித்தியாசத்தைக் கணக்கிட்டு புற்று நோய் உள்ளதா என்பதைக் கண்டறிந்து புகைப்படமாகத் தெரிவிக்கும்.

இந்த புகைப்படங்களை ஒரு மென்பொருள் மூலம் பார்வையிட்டு புற்று நோயின் தீவிரம் குறித்துத் தெரிந்துக் கொண்டு அதன் அடிப்படையில் சிகிச்சைகள் நடத்த உதவியாக இருக்கும்,   இந்த கருவி சோதனை முறையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த கருவி மூலம் 125 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது குறித்து அணு சக்தி ஆய்வு மைய விஞ்ஞானி ஒருவர், ”மார்பக புற்று சோதனைகளை பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செய்வது வழக்கமாகும்.  இந்த புதிய சோதனை மூலம் மார்பக  புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.  இந்த கருவி மூலம் சிகிச்சையை விரைவாகத் தொடங்கி குணம் பெற முடியும்.  இந்த புதிய கருவி இதுவரை 90% மேல் திறமையானது எனத் தெரிய வந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.