சென்னை:

மிழக அரசால் வழங்கப்பட்டு வரும் வீர, தீரப் பெண்களுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட கல்பனா சாவ்லா, ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து உலகமே வியக்கும் அளவில் விண்வெளித்துறையில் சாதனை படைத்தவர்.  விண்வெளிக்கு சென்று திரும்பும்போது, விண்கலம் திடீரென வெடித்து சிதறியதால், கல்பனா சாவ்லா உள்பட அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்.

இதையடுத்து,  அவரது தியாகத்தை போற்றும் விதத்தில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,  தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என அறிவித்து, ஆண்டுதோறும், இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது ஆண்டுதோறும், ஆகஸ்டு 15ந்தேதி  சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் வழங்கப்படும்.

கடந்த 2019ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு தகுதியானர்வள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன்,

அரசு முதன்மைச் செயலாளர்,

பொதுத் துறை, தலைமைச் செயலகம்,

சென்னை – 600009 என்னும் முகவரிக்கு

30.06.2019-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.