கமல்.. நீங்க ஓவியாவா, ஜூலியா? : ஒரு ரசிகனின்  பகிரங்க கடிதம்

திரு கமல்ஹாசன் அவர்களுக்கு,

விஷ்வரூபம் பிரச்சினை, கௌதமியுடன் லிவிங் டூகெதர், விருமாண்டி பிரச்சினை போன்று பல விஷயங்களிலும் உங்களுக்காக நண்பர்களிடம் கம்பு சுற்றிக்கொண்டிருந்த என்னாலேயே உங்களது சமீபத்திய நடவடிக்கைகளை சகிக்க முடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய ஓபிஎஸ்சையும் இபிஎஸ்சையும் நாள் தவறாமல் டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நீங்கள், ஜெயலலிதா இருந்த போது ஒரு வார்த்தையும் பேசவில்லையே ஏன்?

சரி இதை கூட நீங்கள் தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆட்சியாளரைப் பகைத்து தொழில் செய்யும் சூழல் இங்கு இல்லை என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் அரசியலில் நீங்கள் இறங்குவதை கிட்டத்தட்ட முடிவெடுத்த பின் கூட மோடியை விமர்சித்து ஒரு வார்த்தையும் பேசத் தயங்குவதேன். அனிதா பிரச்சினையில் நீட் விஷயம் தமிழ்நாடெங்கும் பற்றி எரிந்த போது நீங்கள் கருத்துக்கூறிய போது கூட அதற்கு காரணகர்த்தாவான மோடி பற்றிப் பேசுவதை கவனமாகத் தவிர்த்ததேன்?

ஒரு தலைவனுக்கு மிக முக்கிய தகுதி துணிச்சல். அரசியலில் இறங்கலாம் என்று முடிவெடுத்த பின் கூட ஆட்சியாளரை எதிர்க்கும் துணிவில்லாத உங்களை நம்பி நான் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?

நீங்கள் இடதா, வலதா என்றால் நான் நடுவில் என்கிறீர்கள்.

முதலில், அரசியலின் நோக்கம் என்ன? எளிமையாகச் சொல்வதானால், மக்களிடையே சமத்துவத்தை உண்டாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும், சிந்தனைத் தரத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது. நேர்மை என்பது தலைவனின் பல பண்புகளில் ஒன்றாக இருக்கலாமே தவிர ஊழல் ஒழிப்பு மட்டுமே அரசியல் ஆகி விடாது. மேற் சொன்ன அரசியல் நோக்கங்களை சித்தாந்தத் தெளிவில்லாமல் எப்படி அடைவீர்கள் என்பதை தயை கூர்ந்து விளக்கவும்.

ரஜினி வந்தால் சேர்த்துக்கொள்வேன் என்கிறீர்கள்.

ரஜினியின் சிந்தாந்தமும், இத்தனை நாளாக நீங்கள் உங்களுடையதாகச் சொல்லிக்கொண்ட சித்தாந்தமும் நேர் எதிர். அப்படி இருக்கும் போது உங்கள் அரசியல் எதை நோக்கி நகரும்? அரசியல் என்ன சினிமா படமா சேர்ந்து நடிக்க. ஒரு வண்டியில் நண்டையும் புறாவையும் பூட்டினால் வண்டி எந்த திசையில் நகரும்?

கருப்பில் காவியும் அடக்கம் என்கிறீர்கள்.

காவி வேண்டுமானால் கருப்பில் சேரலாம் ஆனால் கருப்பு என்றுமே காவியில் சேராது. கருப்பில் காவியும் அடக்கம் என்று சொல்வதை விட கருப்பை யாரும் அவமானப்படுத்தி விட முடியாது. இப்படி சொல்வதற்க்கு பதில் பேசாமல் கருப்பை கெட்ட வார்ததையிலேயே திட்டி இருக்கலாம்.

டீமானிடைசேசனை, அதை அறிவித்த போது நீங்கள் ஆதரித்ததையாவது பொருளாதார தெளிவின்மை என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இப்போது, பார்லிமென்ட் நிலைக் குழு அறிவித்த பின்னும், ஏன் சில பிஜேபி தலைவர்களே அதை தவறென்று சொன்ன பின்னும் நான் காத்திருப்பேன் என்று நீங்கள் சொல்வதற்கு காரணம் மத்திய அரசின் மீது இருக்கும் பயமா அல்லது சந்தர்ப்பவாதமா?

உங்களது அரசியல் எது என்றால், நான் மக்களைப் பிரதிபளிக்கிறேன் என்கிறீர்கள்.

தலைவன் என்பவன் மக்களின் சிந்தனையைப் பிரதிபளிப்பவன் அல்ல, மக்களின் சிந்தனையை செம்மைப்படுத்துபவன்.

தனது கொள்கைகளை அறிவித்து அதை நோக்கி மக்களை நகரச்செய்வதே நேர்மையான அரசியல். எனக்கு எந்த இசமும் இல்லை மக்கள் எவ்வழியோ நானும் அவ்வழி தான் என்பதில் வெற்றி பெறவேண்டும் என்ற சந்தர்ப்பவாத்த்தை தவிர எதையும் என்னால் பார்க்க முடியவில்லை.

உங்களது சமீபத்திய நடவடிக்கைகளில் அனைத்து தரப்பையும் கவர வேண்டும் என்னும் உங்களது உத்வேகம் தெரிகிறது. அனைவருக்கும் நல்லவனாக வேண்டும் என்ற எண்ணம் போலித்தனானது மட்டுமல்ல மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனமும் கூட என்பது உங்களுக்குப் புரியாதது ஆச்சர்யமளிக்கிறது.

உங்கள் பிக் பாஸ் பாஷையிலேயே சொல்வதானால், மக்களுக்காக என்று உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டால் நீங்கள் ஜூலியாகத் தான் ஆகமுடியும்.

இப்படி மக்களுக்காக உங்களின் சுயத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் யுக்தியைப் பயன்படுத்தினால், பிக்பாஸில் கூட உங்களால் ஜெயிக்க முடியாது. (போட்டியாளராகக் கலந்துகொண்டால்)

எங்களுக்கு, தங்கள் அழகான சுயத்தை வெளிப்படுத்தி, மக்களை அப்பாதைக்கு இழுக்கும் ஓவியாக்கள் தான் வேண்டுமே தவிர, வெற்றிக்காக தன் சுயத்தை மாற்றி பச்சோந்தியாக மாறும் ஜூலிக்கள் வேண்டாம்.

நன்றி.

இப்படிக்கு

உங்கள் ரசிகன் பாரதி சுப்பராயன் (கலைஞன் கமலுக்கு மட்டும்)