டிகர் கமல்ஹாசன் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சம் தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்திவெளியி்ட்டு வருவது அவரது ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகர் திலீப் கைது விவகாரத்தில் பாதிக்கப்பட்ட  நடிகையின் பெயரை, பகிரங்கமாக கூறியதற்காக, கமலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..  கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சி ஒன்று  கலாச்சாரத்தை சீரழிப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்…  இந்த விவகாரத்தில் கமலை கைது செய்ய வேண்டும் என்று புகார்…  என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் கமல்.

தவிர, தமிழக அரசில் ஊழல் மலிந்துவிட்டதாக சமீபகாலமாக தொடர்ந்து கூறிவருகிறார் கமல். சமீபத்தில்கூட, “தமிழக அரசின் அத்தனை துறையிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கமலை கடுமையாக விமர்சித்தனர். மேலும் அமைச்சர் அன்பழகன், “அவன், இவன்” என்று ஏகவசனத்தில் கமலை விமர்சித்தார்.

ஊடகம் ஒன்றில் வெளியாகியிருக்கும் செய்தி

இந்த பின்னணியில்தான், “கமல் கைது செய்யப்படுவாரா” என்ற யூகம் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போது கமல், “என்னை கைது செய்ய வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. சட்டத்தின் மீது – நீதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சட்டம் பாதுகாக்கும். என்னை கைது செய்ய வேண்டும் என்றால் செய்யட்டும்.  என்னை கைது செய்யக்கூறும் கூட்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான்” என்று தெரிவித்திருந்தார்.

கமல் கைது செய்யப்பட வாய்ப்பு உண்டா?

சட்டவல்லுநர்கள் சிலரிடம் கேட்டபோது, “மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாலோ, பிக்பாஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாலோ அவரை கைது செய்து விடமுடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை” என்று தெரிவித்தார்கள்.

அரசியல் நோக்கர்கள், “தற்போது தமிழக அரசு கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு மக்கள் எதிர்ப்பு, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 85% சதவிகித ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது என்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

தவிர ஆளும் கட்சியில் மிகப்பெரிய அளவில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கமலை கைது செய்து மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள ஆளும் கட்சி.. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரும்பமாட்டார்” என்கின்றனர்.

மேலும், “இந்த நிலையில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கமல் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும். அல்லது வேறு சிக்கல்களை அவர் எதிர்கொண்டிருக்க நேரிடும். ஏற்கெனவே இதுபோல நடந்திருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் கமலை விமர்சிப்பதோடு ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்வார்களே தவிர, வேறு நடவடிக்கைகைளில் ஈடுபட மாட்டார்கள்” என்று தெரிவிக்கிறார்கள்.

திரைத்துறை வட்டாரத்தில், “சில ஊடகங்களில் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சம் திரையுலகில் நிலவுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு அச்சமோ, பேச்சோ திரையுலகில் நிலவுவதாக தெரியவில்லை. அது ஒரு யூகச் செய்தி” என்கிறார்கள்.

ஆக, “கமல் கைது” என்பது தலைப்பு வைப்பதற்கு வேண்டுமானால் ரைமிங்காக இருக்கலாம். மற்றபடி அது நடக்கக்கூடிய விசயமல்ல.