சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை துப்பாக்கி சூடு வரை கொண்டு செல்ல முடிவெடுத்தது யார் என கமலஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி இன்று நடந்த பேரணியில் வன்முறை உண்டானது.   போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதனால் நாடெங்கும் பதட்டம் நிலவி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் இது குறித்து, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை துப்பாக்கிச் சூடு வரை கொண்டு செல்ல முடிவெடுத்தது யார்?  துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு தமிழக அரசு பதில் கூறியே ஆகவேண்டும்.

நாளை பள்ளி இறுதி வகுப்பு தேர்வு முடிவு வரும் என காத்திருந்த வெனிஸ்டா சுடப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.  ஸ்டெர்லைட் நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல்  தூத்துக்குடியை மாசுபடுத்துகிறது.   இன்று தூத்துக்குடியில் நடந்த இந்த சோகத்தை தமிழகம் என்றும் மறக்காது” என கூறி உள்ளார்.