விஜயகாந்த்

சென்னை:

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்  உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 டிவி சேனலுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

“நான் எந்தத் தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை. தினசரிகளும்  படிப்பதில்லை. எல்லாக் கட்சியும் ஒவ்வொரு பேப்பரையும், தொலைக்காட்சியும் நடத்துவதால் நான் அவற்றைப் பார்ப்பதில்லை. கேப்டன் டிவியில் என்னைப் புகழ்வார்கள். பிறகு ஏன் பார்க்க வேண்டும்?

கமல்

மத்திய அரசு சொன்னது எதையும் செய்யவில்லை. மோடி நல்லவர்தான். ஆனால் மத்தியில் நடக்கும் ஆட்சிதான் சரியில்லை.

ரஜினி, கமல் என்று நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நானும் ஒரு நடிகன் தான். திரைத்துறையில் இருந்துதான் அரசியலுக்கு வந்தேன். அதனால் அது பற்றி எதுவும் கருத்து சொல்ல மாட்டேன். என்னைப் பற்றி நடிகர்கள் எந்தக் குறையும் சொல்லவில்லை. ஆகவே, நானும் அவர்களைப் பற்றியோ அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றியோ எதுவும் சொல்லவிரும்பவில்லை.

விஸ்வரூபம் படத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்தவன் நான்தான். ஆனால், அந்தப் பிரச்சனை முடிந்த பிறகு எனக்குக் கமல் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவை நேரில் பார்த்து நன்றி தெரிவித்தார். விஸ்வரூபம் பற்றியெல்லாம் நான் பேசினால் எங்கள் ஆட்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்

நடிகர் கமல், ரஜினி என யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கேற்ப மக்கள் வாக்களிப்பார்கள்.

என்னுடைய அரசியல் போட்டியாளர்களை வருத்தப்பட வைப்பேன். வரும் தேர்தலில் மக்கள் நிச்சயம் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள், நம்பிக்கையே வாழ்க்கை என நான் நம்புகிறேன்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோருகிறார்கள். எந்த நீதி விசாரணை நடந்தாவது தீர்ப்பு வந்துள்ளதா? எல்லாம் வீண்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ்ஸின் ஆட்சியைக் கவிழ்க்கும் திறமை தினகரனுக்கு உண்டு. அதனால் தினகரனையும் சசிகலாவையும் எளிதாக எடைபோடக் கூடாது. தினகரனும் சசிகலாவும் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்.

122 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து நிற்கவில்லை.  அவர்கள் அனைவரும் சசிகலாவுக்காக எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தவர்கள். அதிமுகவை பொறுத்தவரை சசிகலாவுக்குதான் செல்வாக்கு இருக்கிறது.

டிவி விவாதங்களும் மொழி புரியாத படங்கள் பார்ப்பதும் ஒன்று.

எனக்குத் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ஆங்கிலம் தெரியாது. மலையாளப் படம் பார்ப்பேன்” – இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.