சென்னை:

ந்து தீவிரவாதம் என சர்ச்சைக்குரிய வகையில்  பேசிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து, அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் , கடந்த 2 நாட்களாக பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டில் முடங்கி கிடந்த கமல்ஹாசன் இன்று மீண்டும் பிரசாரத்திற்கு செல்கிறார். இதன் காரணமாக அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்து அமைப்புகள் கமலுக்கு எதிராக திடீர் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு முடங்கினார்.

இந்த நிலையில், இன்று  திருப்பரங்குன்றம் தொகுதியில் கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணிக்கு தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் பனையூர், சிந்தாமணி, வில்லாபுரம், ஹவுசிங்போர்டு காலனியில் பேசுவார். அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் திருப்பரங்குன்றம் பிரசாரத்தையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கமாண்டோ படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.