விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. மாஸ்டர் படம் கடந்த ஏப்ரலில் வெளியாகும் அதைத்தொடர்ந்து ரஜினி படத்தை லோகேஷ் கனராஜ் தொடங்கிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு எல்லா திட்டத்தையும் புரட்டிப் போட்டது.


அண்ணத்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் படத்தில் நடிக்க ரஜினி எண்ணியிருந்தார். ஆனால் கொரோனாவால் அண்ணத்த படப் பிடிப்பு தடைப்பட்டது. பிறகு மாஸ்டர் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் லோகேஷ் இயக்கவிருந்த  ரஜினி படமும் தள்ளியது.

கொரோனா ஊரடங்கு முடிந்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டாலும் முன்புபோல் தற்போது நிலை இல்லை.  அண்ணத்த படத்தை ரஜினி முடிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில்தான் கமல்ஹாசனுக்கு  ஒரு அரசியல் கதையை இயக்க லோகேஷ் எண்ணியிருக்கிறார். கமலும் அதற்கு ஒகே சொல்லியிருக்கிறார்.


ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் ரஜினி நடிப்பதற்கு முன் கமலே தனது தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தியன் 2 படத்தை தனது அரசியல் அதிரடி படமாக தரவிருந்த நிலையில் விபத்து உள்ளிட்ட சில பிரச்னைகளால் அது தற்போதைக்கு முடியாத சூழல் நிலவுகிறது. அதற்கு பதிலாக லோகேஷ் இயக்கும் அரசியல் படத்தில் கமல் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு லோகேஷ் இன்னும்  100 நாள் காத்திருக்க வேண்டும் . ஏனென்றால் கமல்ஹாசன் பிக்பாஸ் 4ம் பகுதியை நடத்த தயாராகி விட்டார்.  அது முடிந்த பிறகுதன் அரசியல் அதிரடிப்படத்தில் களம் இறங்குகிறார் கமல்.