மு.க. ஸ்டாலின் ஆதரவுக்கு கமல்   நன்றி

சென்னை:

னது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்நிகழ்ச்சி, சமுதாயத்தை சீரழிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. காவல்துறையுலும் சில அமைப்புகள் புகார் அளித்துள்ளன.

மு.க. ஸ்டாலி்ன் – கமல்

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்  நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழக அரசின்  அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆளும்கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அமைச்சர் அன்பழகன், கமல்ஹாசனை “அவன், இவன்” என்று ஏக வசனத்தில் பேசினார்.

இந்த நிலையில், ‘‘மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்’’ என்று கமலுக்கு ஆதரவாக  தி.மு.க. செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான  மு.க. ஸ்டாலின் அறிக்கை  விடுத்திருந்தார்.

இதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். தனது  ட்விட்டர் பக்கத்தில் ‘‘அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.

ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..’’ என்று  கமல்  பதிவிட்டுள்ளார்.