சென்னை : 
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் விமர்சித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த 7ந்தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டது. 2 நாட்கள் கடைகள் திறக்கப்பட்டு கல்லா கட்டிய நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், அரசின் அதிகாரங்களில் தலையிடுவது குறித்தும் கண்டித்தது. தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க பச்சைக்கொடி காட்டியது.
உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில்,   “உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதி மன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இனி மக்கள் நீதிமய்யமாக மாற வேண்டிதுதான் கமல்ஹாசன் விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.