கமல் என்ற கடலில் ஒரு கையளவு.. கமல் சிக்ஸ்டி வித் சிக்ஸ்டிஃபைவ்! ஏழுமலை வெங்கடேசன் பகுதி -2

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ஜெமினி–சாவித்திரியுடன் நடித்த களத்தூர் கண்ணம்மா மட்டுமல்ல, அதன் பின் நடித்த எந்த படமாக இருந்தாலும் சிறுவன் கமல் நடிப்பு அசத்தலோ அசத்தல் ரகம்.

சிவாஜி, எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் என, அவரின் குழந்தை நட்சத்திர படப்பட்டியல் டாப் ஸ்டார்களுடன் ஏறுமுகமாவே அமைந்ததை ஒரு மேஜிக் என்றே சொல்லலாம்.

பார்த்தால் பார்த்தால் பசி தீரும் படத்தில் இரட்டை வேடத்தில் சிறுவனாக அசத்திய கமலை, கண்டு அப்போது வியக்காத ரசிகர்களே இல்லை. தங்கவேலுவின் அப்பனாக நடித்து ஏமாற்ற முயற்சிக்கும் போலி சாமியாரை பிடிக்கும் காட்சியில், சிறுவன் கமலின் நடிப்பு வெகு யதார்த்தமாக இருக்கும்.

இயல்பான நடிப்புக்கு பேர் போன தங்கவேலு, சிஆர் சரஸ்வதி, டிபி முத்துலட்சுமி அனைவருக்குமே அந்த காட்சியில் சிறுவனான கமல் நிகராக நின்று ஈடு கொடுத்திருப்பார்.

எம்ஜிஆருடன் ஆனந்தஜோதி, எஸ்எஸ்ஆருடன் வானம்பாடி ஆகிய படங்களிலும் கமல் கலக்கியதை பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை.

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் வானம்பாடி படத்தின் இரண்டாவது கதாநாயகியான ஷீலா சிறுவன் கமலை தூக்கிக்கொண்டு வருவார். ஒன்பது வயது மூத்தவரான அதே ஷீலா பின்னாளில் கமலின், கதாநாயகியாக இரண்டு மலையாள படங்களில் ஜோடி போட்டது காலத்தின் விசித்திரம். சிறுவனாகவே மலையாளத்திலும் அறிமுகமானவர் கமல்.

1962-ல் கண்ணும் கரளும் மலையாள படத்தில் கமலை இயக்கும் போதே கே.எஸ்.சேதுமாதவனுக்கு சிறுவனின் திறமை தெரிந்திருக்கும்போல.. அதனால்தான் 70-களின் துவக்கத்தில் தமிழில் வெற்றிகரமான கதாநாயகன் ஓபனிங் கிடைக்காமல் தத்தளித்துக்கொண்டிருந்த கமலை 1974-ல் கன்யா குமாரி படத்தின் கதாநாயகனாக்கினார். மலையாள படவுலகில் நடிப்பின் பரிமாணங்களை அடுத்தடுத்து பெற்றுக்கொள்ளவும் சேதுமாதவன் வழி வகுத்துத்தந்தார். இந்த சேதுமாதவன் தான் எம்ஜிஆரின் நாளை நமதே, கமலின் நம்மவர் போன்ற படங்களை இயக்கியவர்.

சிறுவயதில் நட்சத்திரங்களாய் மின்னுபவர்கள் வயது ஏற ஏற ரெண்டுங் கெட்டான் நிலையை சந்தித்து திரையுலக பயணத்தில் தடைபடுவார்கள். 9 வயது கமலுக்கும் அப்படியொரு கட்டம் வந்தது.

ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இளைஞனாக திரையுலகிற்கு திரும்பிய அவருக்கு நடிப்பதற்கே ஒப்பனிங்கே கிடைக்காமல் அல்லாடினார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்எஸ்ஆர், சாவித்திரி, தேவிகா, சரோஜோதேவி என பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் நடித்திருந்த வரலாறு இருந்தாலும், அவர் யாரிடம் போய் சிபாரிசு செய்யச்சொல்லி வாய்ப்பு கேட்டு நிற்கவில்லை. அந்த நட்சத்திரங்களும் இளைஞன் கமலைப்பார்த்து புளங்காகிதப்பட்டு வாரியணைத்து, வாய்ப்பு வழங்க முற்பட்டதாகவும் எங்குமே தகவல்கள் இல்லை.

குழந்தை நட்சத்திர கமல் இளைஞனாகி இரண்டாவது இன்னிங்சை துவக்கி ஆட ஆரம்பித்தபோது நிச்சயம் சோதனையான காலம் என்றே சொல்லவேண்டும். வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளி நடன இயக்குநர் தங்கப்பனிடம் கமலை அசிஸ்ட்டெண்ட்டாக கொண்டு போய்விட்டது.

தங்கப்பனுக்கு அப்போது ஜெய்சங்கரை வைத்து தேவர் தயாரித்த மாணவன் படத்தில் வேலை. அவர் ஒரு அடி எடுத்துக்கொடுக்க சாண்டோ சின்னப்பா தேவர் பெரிய மனது வைக்க 1970-ல் வெளியான ஜெய்சங்கர் படத்தில் கமல் இளைஞனாக முதல்முறையாய் தலைகாட்ட முடிந்தது. விசிலடிச்சான் குஞ்சுகளா என குட்டி பத்மினி யுடன் பாடலுக்கு நடனமே ஆடினார். இருவருமே குழந்தை நட்சத்திரங்களாக சக்கைபோடு போட்டவர்கள்.

ஏற்கனவே சொன்னது போல, முன்னணி நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாய் நடித்து பேர் வாங்கிய கமல் இப்போது சோதனை கட்டமாய், திரைக்கு பின்னால் இருந்து கொண்டு அதே நட்சத்திரங்களுக்கு பாடலுக்காக நடனம் கற்றுத்தந்தார்.

எம்ஜிஆருக்கு நான் ஏன் பிறந்தேன், சங்கே முழங்கு, சிவாஜி ஜெயலலிதாவுக்கு சவாலே சமாளி தெலுங்கில் நாகேஸ்வரராவ்க்கு என ஒரு பட்டியல் போகும்.

கமல் பத்துவேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தில், பல்ராம் நாயுடுவின் செல்போன் ரிங்டோனாக ‘எந்தே சின்னித ஜீவிதம்…’ என்று ஒரு தெலுங்கு பாடல் வரும். 1971-ல் அந்த பாடலுக்கு நாகேஸ்வரராவுக்காக நடனம் சொல்லித்தந்ததே கமல் அண்ட் கோ என்பதெல்லாம்கூட எதனோடோ எதையோ சேர்க்கும் கயாஸ் தியரிதான்.. அது தான் கமல்…

ஒரு பக்கம் டான்ஸ் மாஸ்டராகவும் உதவி இயக்குநராகவும் திரைக்கு பின்னால் பயணித்த கமல், எப்படியாவது திரையில் கதாநாயகனாக மின்னிவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார். அதனாலேயே துண்டு ரோல்கள் என்றாலும் வந்த வாய்ப்புகளை அவர் விடவில்லை.

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கிய குறத்தி மகன் படத்தில் ஓவர் ஆக்ட்டிங் செய்யும் நாயகன் மாஸ்டர் பிரபாகரோடு, நல்ல முகப்பொலிவுடன் உள்ள கமல் கும்பலோடு கும்பலாய் வந்து போகும் காட்சிகளை பார்த்தால் மனதே கலங்கிப்போகும்.

இதைப்பார்த்து கே.பாலசந்தர் பரிதாப்பட்டாரோ என்னவே அரங்கேற்றம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தார். கே.பி காட்டிய வழியில் அவள் ஒரு தொடர்கதை, சொல்லத்தான் நினைக்கிறேன் என வண்டி ஓட ஆரம்பித்தது. ஆனால் ஹீரோ வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஏபி நாகராஜன் கூட குமஸ்தாவின் மகள் படத்தில் வில்லன் ரோலைத்தான் கொடுத்தார். கமல் என்ற நடிப்பு ராட்சஷன், தீனிபோடத் தெரியாதாவர்களால் சிவகுமார் ஜெய்சங்கர் போன்றோரின் படங்களில் இரண்டாம் ஹீரோவாக, கதாநாயகிகளுக்கு அண்ணன் தம்பியாக வலம் வரவேண்டிய நிலைமை.

அன்பு தங்கையில் ஜெயலலிதாவுக்கு புத்திமதி சொல்லும் புத்தன் ரோல், நான் அவன் இல்லை படத்தில் ஜெயபாரதிக்கு தம்பி ரோல் என அது ஒரு நீளமான நிழல் பயணம்.

அதே ஜெயபாரதிக்கு ஹீரோவாகவும் நடித்தார் கமல். அதே ஜெயபாரதி மைக்கேல் மதன காமராஜனில் நான்கு கமல்களுக்கு தாயாகவும் வந்துபோனார் என்பது கமல் திரைவாழ்க்கையின் ஆச்சர்யங்கள்.

தமிழ்சினிமா பெரிய அளவில் கண்டுகொள்ளாத இந்த மோசமான சூழலில் கமலுக்கு கை கொடுத்து தூக்கிவிட்டது மலையாள திரையுல ஜாம்பவான்கள்தான். ஏற்கனவே சொன்னது போல, மலையாளத்தில் கமலை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சேதுமாதவன்தான், கன்யாகுமரி படத்தில் கமலை முதன்முதலாக கதாநாயகனாக்கினார்.

இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் அவார்டு முதன் முறையாக கமலுக்கு கிடைத்தது.

இதே கமல், பின்னர் தென்னிந்திய மொழிகளில் அத்தனைலும் நடித்து சிறந்த நடிகர் என பிலிம்பேர் அவார்டு களாக வாங்கித்தள்ளினார் என்பது ஆச்சர்யமான விஷயம். பிலிம்பேர் அவார்டு என்பது அப்போதெல்லாம், அரசின் தேசிய விருதுக்கு பிறகு திரையுலகம் கௌரவமாக நினைக்கிற விருதாகும்.

அப்படிப்பட்ட பிலிம்பேரிடம் 17 முறை விருது பெற்ற கமல், ஒரு கட்டத்தில் இனி எனக்கு கொடுக்காதீர்கள், அந்த வாய்ப்பை வேறு ஒருவருக்கு கொடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு சொல்லி விட்டார் கமல்.

கன்னியாகுமரிக்கு பிறகு தொடர்ந்து நடிப்புக்கு நல்ல தீனி போட்டு அவரை மேலும் மேலும் மெருகேற்றிய மலையாள படங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது விஷ்ணு விஜயம். படத்தில் மதமதப்பான உடல்வாகோடு வந்து மலையாள டாப் ஸ்டாரான கதாநாயகி ஷீலா படு மெச்சூரிட்டியாய் காட்சிக்கு காட்சி அதகளம் செய்வார்.

பிரேம்நசீருடன் 100-க்கு மேற்பட்ட படங்களில் ஜோடி போட்டு கின்னஸ் சாதனையே படைத்தவர் அவர். செம்மீன் ஷீலா என்றால் அந்த தலைமுறைக்கும் ரஜினியின் சந்திரமுகி பட அகிலாண்டேஸ்வரி அம்மாள் என்றால் இந்த தலைமுறைக்கும் நன்றாக தெரியவரும்.

இன்றைக்கு அரண்மணை பார்ட்ஒன் பார்ட் டூ என்று கலக்கிக்கொண்டிருக்கு அரண்மனை திரில்லர் சீரிஸ் படத்தின் பாட்டி படமான #யக்ஸகானம் மலையாள படத்தின் டைரக்டரும் இதே ஷீலாதான், யக்சகானத்தின் தமிழ் ரீமேக்தான் ரஜினி விஜயகுமார் லதா நடித்து 1978-ல் வெளிவந்து அப்போதைய ரசிகர்களை திகிலடைய வைத்த “ஆயிரம் ஜென்மங்கள்” படம் .

அப்படிபட்ட ஷீலாவுடன் புதுமுகம் என்ற பயமே இல்லாமல் அனாயசமாக கமலும் காட்சிக்கு காட்சி டீல் செய்வார். அதுவும் எப்படி? நூறு சதவீத மண்வாசனையோடு கூடிய மலையாளத்தில் பேசி.

மொழி மட்டுமல்ல கமலின் உடல் மொழியும் வியக்க வைக்கும். இதே ஷீலாவுடன் கமல் நாயகனாக நடித்த இன்னொரு முக்கிய படம் யேட்டா. சீமாவும் ஒரு நாயகி. டைரக்டர் வேறு யாருமல்ல ஐ.வி. சசி. சீமாவை காதலிக்கும் கமல் இளம் விதவையான ஷீலாவின் விரக தாபத்திற்கு முன் எவ்வளவோ முயன்றும் தப்ப முடியாமல் மாட்டிக்கொள்வார். குடிப்பழக்கம் இல்லாத கமலுக்கு அதை ஏற்படுத்திக்கொடுத்து தன் வசப்படுத்திக் கொள்வார், கர்ப்பமாகவும் ஆகிவிடுவார் ஷீலா.

படத்தில் அப்படியே நிஜமான மலையாளியாகவே மாறிப்போயிருப்பார் கமல் ஹீரோயிசம் காட்டாமால் இயல்பான மனிதனாகவே வந்து போவார். கிளைமாக்சில், முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்ல பிரேமில் இருக்கும் துணை நடிகர்கள் கூட எப்படி அந்த காட்சியில் பொருந்திப்போக வேண்டும் என்பதை அற்புதமாக சொல்லி யிருப்பார்கள்.

வில்லனால் சுடப்பட்டு, விதவையின் வயிற்றில் வளர்வது தன் குழந்தை என்றும் அதை நீங்கள் தான் வளர்க்க வேண்டும் என்றும் தந்தை மதுவிடம் (தர்மதுரையில் ரஜினிக்கு அப்பாவா வந்த மலையாள ஜாம்பவான்) வாக்குமூலம் தந்துவிட்டு உயிரைவிடுவார்.

கமல் உயிரை விடும் தருணத்தில் காதலி சீமாவை விட கர்ப்பவதியான விதவை ஷீலா தன் உயிரையே அறுப்பது போல வெளிப்படுத்தும் உணர்ச்சியோடு கூடிய அழுகை, முக்கிய பாத்திரங்களுக்கு எளிதாக உண்மையை உணர்த்தி விடும். டைரக்டர் ஐ.வி சசி புகுந்து விளையாடிப்பார்.

கிளைமாக்ஸ் முடியும் போது படத்தில் அதற்கு முன் பார்த்து ரசித்த அத்தனை படு கிளாமர் சீன்களும் பொடிப் பொடியாய் நொறுங்கி போய்விடும்.

யேட்டா போன்ற மலையாள படங்கள் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னட படங்களிலும், அந்த மாநில மக்களின் உடல்மொழியை இயல்பான வகையில் தெறிக்கவிட்டவர் விட்டவர் கமல்.

பெரிய அளவில் படிக்காத கமலுக்கு இருபதே வயதில் நடிப்பு, டான்ஸ் அன்னிய மொழிகள் என பல விஷயங்கள் அநியாயத்துக்கு வசப்பட்டு போயிருந்தன என்றால் மனுஷன் எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு ஒவ்வொன்றையும் அணுகியிருக்க வேண்டும்.

அரங்கேற்றம் கமலுக்கு விஸ்வரூபம் கமலுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம். அதைவிடுங்கள் மைக்கேலுக்கும் மதனகோபாலுக்கும் ராஜுவுக்கும் காமேஸ்வரனுக்கும் இடையே ஒரு படத்திலேயே எத்தனையெத்தனை வித்தியாசங்கள்.

எப்படி சாத்தியப்பட்டது இதெல்லாம்? கே.பாலச்சந்தரை தாண்டி ஆர்.சி. சக்தி, அனந்து போன்றவர்கள் எப்படி கமல் கோட்டை உருவாக காரணமாக இருந்தார்கள்?

தொடர்ந்து கமல் என்ற கடலில் பயணிப்போம்…