கமல் என்ற கடலில் ஒரு கையளவு.. கமல் சிக்ஸ்டி வித் சிக்ஸ்டிஃபைவ்! ஏழுமலை வெங்கடேசன்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

இன்றைய தேதிக்கு இந்தியன் – 2 என்ற மெகா பட்ஜெட்டில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார் உலக நாயகன் என போற்றப்படும் கமல்ஹாசன். ஆச்சர்யம் என்னவென்றால், தமிழ்சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜர் படம் வெளிவந்த ஆண்டில் கமலின் படம் வெளியாகியிருந்தது என்பதுதான்.
ஆமாம், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட எம்கேடியின் கடைசி படமான சிவகாமியும் கமலின் முதல் படமான களத்தூர் கண்ணம்மாவும் 1960-ல்தான் வெளிவந்தது

எம்கேடி,காலத்தில் ஐந்துவயது குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர், 60 ஆண்டுகள் ஆன பிறகும் திரையுலகில் தற்போது வலம் வருகிறார் பத்தோடு பதினொன்றாக அல்ல..65 வயதிலும் நாடே வியந்து பார்க்கும் முன்னணி கதாநாயகனாகேவே திரையுலகில் எழுபதாண்டு கலைப்பயண சாதனை படைத்த வில்லன் நடிகர் எம்என் நம்பியாருக்க டுத்து நடிகர்களில் கமல் மட்டுமே அறுபதாண்டு கால திரையுலக வாழ்வை நெருங்கி யிருக்கிறார்..

இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகைகள்தான் மாநில மொழிகள் கடந்து, வெகு சுபலமாக எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். நடிகர்களுக்கு அந்த வாய்ப்பு, அவ்வளவு எளிதில் கிடைக்காது.
இந்திபடத்தில் நடித்து நாடு முழுவதும் டாப் ஸ்டார்களாக அறியப்பட்ட பலர் அவர்களது தாய்மொழி படங்களில் நடிக்கத் தயங்கினார்கள். இந்தியை மட்டுமே கட்டிக்கொட்டு அதைவிட்டு வெளியேவர முடியாது என்றார்கள்..

ஆனால் தமிழனான கமல், தமிழ் மட்டுமின்றி, மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளை தாண்டி, வங்காளம்வரை போனார். ஆறுமொழிகளில் தடங்களை பதித்தார். 1977-ல் கபிதா என்ற பெங்காலி படத்தில் சொந்தக்குரலில் பேசி நடித்தார். தமிழில் கே.பாலசந்தர் இயக்கி சுஜாதா அறிமுகமான அவள் ஒரு தொடர்கதையின் ரீமேக்தான் கபிதா. அதே விகடகவி ரோலில் கமல் நடிக்க சுஜாதா ரோலில் மாலா சின்ஹா.
உலக அளவில் இன்றளவும் காவியமாக பேசப்படும் பியாசா(1957) படத்தின் நாயகி. 1950களில் மாலாசின்ஹா ஜோடிபோடாத இந்தி டாப் ஸ்டார்களே கிடையாது. அவள் ஒரு தொடர்கதையைவிட கபிதாவில் பயந்தசுபாவம் குறைந்து மெச்சூரிட்டி தனத்தை பெங்காலியில் விகடகவியான கமல் கொண்டுவந்தார்.

மாலாசின்ஹா மட்டுமல்ல, இந்திய சினிமாவின் எந்த ஜாம்பவான்களையும் கமல் என்ற புள்ளியை எதோ ஒருவகையில் நேர்க்கோட்டில் இணைத்துவிடமுடியும். தர்மேந்திராவா என்றால், ஆமாம் 1976-லேயே ஆய்னா இந்திப்படத்தில் அவருக்கு டான்ஸ் சொல்லித்தரும் நடன இயக்குநர் பாத்திரத்தில் கமல் வருவாரோ என்று முடிக்கலாம். அரங்கேற்றம் படத்தின் ரீமேக் படம் அது

ஒருவகையில் சொன்னால் கமல், முதன் முதலாய் தலைகாட்டிய இந்திப்படம் என்றே அதை சொல்லலாம். சில விநாடிகள் மட்டுமே திரையில் தோன்றுவார். ஆனால் அதே கமல் அதே இந்தி திரையுலகில் சில ஆண்டுகளில் மேஜிக்கையே நிகழ்த்தினார். அவர் இந்தியில் கதாநாயகனாக அறிமுகமாகிய ஏக் துஜே கேலியே படம் தறிகெட்டு ஓடி வசூலில் பலகோடிகளை குவித்தது. வட இந்திய ஸ்டார்களின் வயிற்றில் புளியை கரைத்தார் என்றே சொல்லவேண்டும்.

கவித்துமான காதல்காட்சிகளை ரதியுடன் சேர்த்து கமல் தந்த விதம், காதலனோ காதலியோ இல்லாதவர்களை அதிகம் ஏங்க வைத்தது. பெற்றோரின் எதிர்ப்பால் கடைசியில் தற்கொலை செய்துகொள்கிற இருமாநில காதலர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது. தென்னகத்து எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய இந்திப் பாடல்கள், நம்ம பொழப்புல மண் விழுமோ என சில வடக்கத்திய பின்னணி பாடகர்களை மிரளும் அளவுக்கு நாடு முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

இந்தியில் கமலை ஏற்றிவிட்ட ஏக் துஜே கேலியே என்ற மெகா ஹிட் படமே, மரோசரித்ரா என்ற தெலுங்கு மெகா ஹிட்டின் ரீமேக்தான், 1978ல் ரிலீசான கமல்-சரிதா ஜோடியின் மரோசரித்ரா சென்னையில் சுமார் 600 நாட்களுக்கு ஓடி சாதனை படைத்தது. இதற்கு முன் நேரடி தெலுங்குப்படம் எதுவும் அவ்வளவு நாட்கள் சென்னையில் ஓடியது கிடையாது.

அதற்கு ஓராண்டுக்கு முன்தான் கோகிலா என்ற கன்னப்படம், சென்னையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அதற்குமுன் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் படங்கள்கூட அந்த சாதனையை படைக்கவில்லை. கமலின் முதல் கன்னடபடமான கோகிலாவின் ‘’சென்னை வெற்றி’’ பிரமிக்கவைத்தது. பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா படத்தில்தான் பின்னாளின் சில்வர் ஜுப்ளி ஸ்டார் என்றும் மைக் பார்ட்டி என்றும் போற்றப்பட்ட நடிகர் மோகன் அறிமுகமானார்.

இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும் சாதனைகளும் வியப்பானதகவல்களும் கொட்டும் கமலின் ஆரம்பகால வாழ்க்கை வழக்கமானதாக அமையவில்லை.

பரமக்குடியில் புகழ்பெற்ற வழக்கறிஞர் சீனுவாசன் என்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் கமல். பெற்றோர் சொற்படி அவரின் இரண்டு சகோதரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள் என்றால், கமல் சென்ற பாதையோ நடனம், நடிப்பு கதை என முற்றிலும் நேர்மாறாய். மெத்தப்படித்தவர்கள் குடும்பத்தில் கமல் என்ற கட்டுப்படாத, குட்டி சுனாமி.

மற்றவர்களைப்போல கமலின் தாய் ராஜலட்சுமி,’’ ஏன்டா இப்படி உருப்படாமபோறதுக்கு வழிதேடற என்றெல்லாம் சொல்லவில்லை. கக்கூஸ் கழுவுற வேலையை செய்ய நேரிட்டாலும் உலகத்துலயே அந்த அளவுக்கு உன்னை மாதிரி யாரும் சுத்தமா கக்கூசை கழுவியதில்லை என்று பெயரெடுக்கணும்’’. இதுதான் ராஜலட்சுமி தன் மகனுக்கு சொன்ன அறிவுரை. அதாவது எதைசெய்தாலும் அதில் தனித்துவம் வேண்டும் என்பது அந்த அம்மணியின் கொள்கை.

,பள்ளிப்படிப்பைக்கூட முழுதாக முடிக்கமுடியாத அந்த கமல், தாய் சொன்ன தனித்துவ மனதினால்தான், வெகுவாக உயர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அமெரிக்க துணை தூதரகத்திற்கு பேட்டி அளித்தபோது வித்தியாசமான பரிணாமத்தை காட்டினார்.

பேட்டி எடுத்தவர், அந்தக்காலத்து ஹாலிவுட் ஜாம்பவான்களான மார்லன் பிராண்டோ மற்றும் ஜான் வெயின் ஆகியோரின் புகழ்பெற்ற வசனங்களை பேசச்சொன்னபோது, அதே மாடூலேஷனில் அப்படியே பேசிக்காட்டி அசத்தினார்.

இவ்வளவிற்கும் காரணம், கமல் பயிற்சி எடுத்துக்கொண்ட பட்டறைகள் அப்படி. சமீபத்தில்கூட கமலின் வெவ்வேறு படங்களின் பிரசித்தி பெற்ற வசனங்களை, தசாவதாரத்தின் பத்து கதாபாத்திரங்கள் பேசுவதுபோல் பேசிக்காட்ட முடியுமா என்று அவரிடம் கேட்டார்கள். மனிதர் விநாடி தாமதிக்காமல் உடனே கமலுக்குள் பத்து அவதாரங்களை கொண்டுவந்து அடுத்தடுத்து பத்து கேரக்டர்களையும் அப்படியே அச்சு அசலாக பேசவிட்டு பார்வையாளர்களை இப்படியொரு கலைஞனா என வழக்கம்போல பிரமிக்கவைத்துவிட்டார்.

அந்த அளவிற்கு சினிமா ரத்தத்தோடு ஊறிப்போயிருக்கும் கமலுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம், ஆரம்பம் முதலே ஜாம்பவன்களுடன் மட்டுமே திரையில் நடந்தது.

5 வயதில் நடிக்க ஆரம்பித்து 1960ல் கமலின் முதல் படம் களத்தூர் கண்ணம்மா வெளியானது. சிவாஜியை அறிமுகப்படுத்திய அதே ஏவிஎம் நிறுவனம், காலத்தால் அழிக்கமுடியாத காவியங்களை சிவாஜிக்காக இயக்கிய ஏ.பீம்சிங்தான் கமலை முதலை இயக்கியவர். உதவி இயக்குநராக இருந்த எஸ்பி முத்துராமன்தான் பின்னாளில் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி என கமலின் வசூல் மழை படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் வெற்றிகரமாய் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கிய சாதனை படைத்தவர் எஸ்பி முத்துராமன்.

களத்தூர் கண்ணம்மாவில் கமலின் நடிப்பு உண்மையிலேயே அதிசயவைக்கத்தக்க ஒன்று. பொதுவாக குழந்தை நட்சத்திரங்கள் ஓவர் ஆக்டிங்தான் செய்வார்கள். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தை நட்சத்திர விவகாரத்தில் மிகவும் நேர்த்தியாய் செய்தது முதன் முதலில் கமல் மட்டுமே. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலை உற்று கவனித்தால் இந்த நேர்த்தி நன்றாக தெரியும். அதனால்தான் முதல் படத்திலேயே அதுவும் ஆறுவயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை ஜனாதிபதி கையால் கமல் பெறமுடிந்தது.

ஜெமினி–சாவித்திரியுடன் நடித்த களத்தூர் கண்ணம்மா மட்டுமல்ல, அதன்பின் நடித்த எந்த படமாக இருந்தாலும் சிறுவன் கமல் நடிப்பு அசத்தலோ அசத்தல் ரகம். அதனால்தான் எத்தனை மேடைகளில் எத்தனை விருதுகளை பெற்றார் என்பதை அவ்வளவு சுலபத்தில் கூட்டிப்பார்த்து சொல்லிவிடமுடியாது. விருதுகளின் எண்ணிக்கையை எண்ணிப்பார்க்கவே இப்படியொரு திண்டாட்டம் என்றால் அவரின் படங்களை அவற்றில் பொதிந்துள்ள ஆச்சர்யங்களை விவரிப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம்?

ஒரு நாள் காத்திருந்து பார்ப்போம்