சென்னை:

மெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. தற்போது நடிகர் கமலஹாசன் ரூ.20லட்சம் நன்கொடை கொடுத்தார்.

உலகின் பழைமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனித் துறை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு என இதுவரை தனித்துறை  இல்லை. தமிழுக்குத் தனித்துறையைத் தொடங்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களால் கோரிக்கை வைத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வந்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தொடங்க வேண்டும் என்றால்,  ரூ.42 கோடி வழங்க வேண்டும். இதில் ரூ. 21 கோடியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அமெரிக்கவாழ் தமிழ் மக்களும் நிதியாக தந்து உதவி புரிந்துள்ளனர். மேலும் தேவைப்படும்  ரூ. 21 கோடியை வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ அமைப்பின் தலைவரா ஜானகிராமன் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பாக  ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,  25 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவித்தி ருந்தார். அதையடுத்து திரையுலகை சேர்ந்த நடிகர் விஷால் உள்பட ஒருசிலர் நிதி உதவி செய்வதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது சார்பாக  ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின்  தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் திரு கமல்ஹாசன் அவர்கள் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

‘ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்’ என்பது அவர் கருத்து’ எனக் கூறினார்.

இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.