நெட்டிசன்:

பத்திரிகையாளர் கவிதா குமார் அவர்களது முகநூல் பதிவு:

துரை வேளாண்மை கல்லூரி எதிரே இருக்கும் காலிமைதானத்தில் பல கட்சிகளின் மாநாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று கமல்ஹாசனின் கட்சி அறிமுகக் கூட்டமும் இங்கு தான் நடந்தது.

ஆறு வெள்ளை, சிவப்பு கரங்கள் கோர்த்தது போன்ற வடிவத்துடன் நடுவில் நட்சத்திரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கொடியை கமல் ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக இயக்குநரும், கவிஞருமான ராசி அழகப்பன் உணர்ச்சி பொங்க பேசினார்.

குறும்பட இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களாக மகேந்திரன், ஏ.அருணாசலம், பேரா.கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேல், பாரதிகிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீப்ரியா, தயாரிப்பாளர் கமீலா நாசர், சவரிராஜன், வழக்கறிஞர் ராஜசேகரன், சிகே.குமாரவேல், மூர்த்தி, முன்னாள் ஐஜி மவுரியா, பா.ராஜநாராயணன், ஆர்ஆர்.சிவராம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

மேடையில் சிலர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். ரங்கராஜன் ஐஏஎஸ், கவிஞர் சினேகன், ஜல்லிக்கட்டு பேரவை ராஜேஸ், நடிகர்கள் வையாபுரி, பரணி, தயாரிப்பாளர் சுரேஷ், சிகே.அருண் ராஜசேகர் ஆகியோர் தான் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முப்பாக பாப்பம்பட்டி ஜமாவின் பெரிய மேளம், சமர் கலைக்குழுவின் தப்பாட்டம், தேவராட்டம், நாதஸ்வர கச்கேரி களைகட்டியது. ரசிகர்களாக இருந்த தொண்டர்களாக மாறிய பலர் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் பேச்சு மிகச்சுருக்கமாக இருந்தது. டெல்லியில் 70 இடங்களில் 67 இடங்களைப் பெற்று காங்கிரஸ், பாஜகவை தான் தோற்கடித்தது போல, தமிழகத்தில் கமல்ஹாசன் அதிமுக, திமுகவை தோற்கடிப்பார். எனது வெற்றியை முறியடிப்பார் என்று அவர் பேசினார்.

அனைத்து விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன், கமல் அழைக்கவில்லை. நானாகத் தான் வந்தேன். தலைமை இல்லாமல் தமிழகம் தாழ்ந்து கிடக்கிறது- தமிழகத்தின் நீர், மண், கலாச்சாரம், மொழி உள்ளிட்ட அனைத்தும் பறிபோகிறது. கமல்ஹாசன் விவசாயிகளைக் காக்க 3 லட்சம் பேரைத்தருகிறேன் என்று சொன்னதால் இங்கு வந்தேன் என்று பேசினார்.

நிறைவாக கமல் பேசினார். கடந்த 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்து கொண்டிருந்த நமக்கு, பல ஆட்சிகள் இடையூறு செய்தன. கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். ஆனால், அவை மறந்தவையாக இருக்கக்கூடாது. இன்றே எனக்கு கெஜ்ரிவால் பிரசாரத்தை துவக்கி வைத்து விட்டார். எத்தனை காலம் இந்த அநீதிகளைப் பார்த்துக் கொண்டு ஊமைகளாக கனவு காணமுடியும். உங்கள் கொள்கை என்ன எனக்கேட்கிறார்கள். சிறந்த ஆட்சி நடத்துபவர்களின் கொள்கைகள் தான் என் கொள்கைகளும்.

நீங்கள் இடதுசாரியா, வலதுசாரியா எனக் கேட்கிறார்கள். அதனால் தான் கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் அதாவது சென்டர் என வைத்தேன். தராசு முள் போல் நடுநிலையோடு இருப்பேன். தரமான கல்வி வழங்குவேன். சாதி, மத விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். நான் இதைசெய்து காட்டுவேன்.

ஓட்டு போட 6 ஆயிரம் வாங்கினீர்கள். முடியுமா?. என்னிடம் கேட்டால் தரமாட்டேன். ஆனால், 6 ஆயிரம் ரூபாய் என்பது அடிமாட்டு விலைக்கு வாக்குகளை விற்றுள்ளீர்கள். நீங்கள் ஏமாற்றப்பட்டுளளீர்கள். வேலையில்லாத கூட்டம் அதிகமாகியுள்ளது. அதை இல்லாமல் செய்ய முடியும்.

காவிரி பிரச்னை மட்டுமல்ல எந்த பிரச்னையையும் உட்கார்ந்து அமைதியாக பேசினால் முடிந்து விடும். ஆனால், ஒருவரை ஒருவர் இப்பிரச்னையில் தூண்டி விட்டு குளிர்காய்கிறார்கள். முறையான உரையாடல் நடந்தால் எந்த மாநிலத்திலும் இருந்தும் எதுவும் வாங்க முடியும் தண்ணீர் மட்டுமல்ல ரத்தமும் வாங்க முடியும். கேரளா முதல்வர் பினராய் விஜயனின் வாழ்த்து எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைத் தந்துள்ளது.

கொடியில் உள்ள 6 கைகள் தென்னிந்திய மேப். அது 6 மாநில கரங்கள் அவை . நட்சத்திரம் மக்கள் தான். எனக்கு 63 வயதாகிறது. என் வயதைக் கிண்டல் செய்கிறார்கள் ஆயுள் குறைவானர்கள்.

நான் காசு வாங்கித்தான் நடித்தேன். நீங்கள் காசு கொடுத்து படம் பார்த்தீர்கள். அந்த குற்ற உணர்வு தான் என்னை உந்தித்தள்ளியது. இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக எனத் தீர்மானித்தேன். அதற்காகத்தான் இவ்வளவு அவசர அவசரமாக நடவடிக்கை. தேர்தல் கமிஷனிலும் கட்சி பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்த கட்டமைப்பு என்னுடன் முடிவடைவதல்ல. 2, 3 தலைமுறை வரை தாக்குப்பிடிக்கும். இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் என்று கேட்கிறார்கள். இத்தனை நாள் உங்கள் இதயத்தில் இருந்தேன். இனி உங்கள் இல்லத்தில் இருப்பேன் என்று கமல்ஹாசன் பேசினார்.

கட்சி நிர்வாகிகள் அனைவரும் கமலுக்கு வாழ்த்து சொல்லி ஹக் செய்தனர். இது கட்டிப்பிடி வைத்தியமல்ல என பாரதிகிருஷ்ணகுமார் கிண்டல் செய்தார்.

சினிமா சூட்டிங் போல ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மொத்த கட்சி நிகழ்ச்சியையும் பதிவு செய்தது. அதற்கேற்ப அந்த தொலைக்காட்சியின் வடிவத்தை நிகழ்ச்சி துவங்கிய பின் பின்திரையில் காட்சியாக மாற்றியது. பிக்பாஸ் செட் போல அமைக்கப்பட்ட மேடை. மாநாட்டு நுழைவாயில் குவித்து வைக்கப்பட்ட நாளை நமதே என்ற வாசகம் அடங்கிய அட்டை அனைவர் கையிலும் திணிக்கப்பட்டது. காலரிகளில் பெரும்பாலும் அவை கீழே கிடந்தது.

தனது அரசியலை பெரிய ஜாம்பவன்கள் அதாவது வெளிமாநில முதல்வர்களை அழைத்து வந்து விளம்பரப்படுத்த கமல் நினைத்த முயற்சியில் கெஜ்ரிவால் மட்டுமே கிடைத்துள்ளார். பினராய் விஜயன் வாழ்த்து செய்தி மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சந்திரபாபுநாயுடு, மம்தா போன்றோரை அழைக்க நினைத்த கமலுக்கு அங்கிருந்து வாழ்த்து செய்தி கூட கிடைக்கவில்லை.

வெற்றிடங்களில் பூச்செடிகளை நடுவதற்கும், குப்பையைக் கொட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எந்த கொள்கை அறிவிப்பும் இல்லாமல் திட்டங்கள் இல்லாமல் களத்தில் குதித்து கட்சியை அறிவித்துள்ள கமலின் நிலை இரண்டாம் வகையைச் சேர்ந்தது.