கமல், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை கூட சந்திக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

சென்னை:

க்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா காந்தியை சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக் குமார், கமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-ஐ  கூட சந்திக்கலாம், அதுஅவரது உரிமை என்று  என்றும்  நக்கலாக கூறினார்.

இன்று சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

இன்று சர்வதேச யோகா தினம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகா உகந்தது . உடலைப் பேணிக்காப்பதற்கு யோகா அவசியம் என்று கூறினார்.

மேலும் சென்னை சேலம் பசுமை வழிச்சாலைக்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில்  கூறும்போது,  நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அடிப்படை கட்டமைப்பு  என்பது மிக மிக முக்கியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அடிப்படை கட்டமைப்பு  நன்றாக உள்ளது.

தற்போது பரபரப்பாக இயங்கி வரும்  சென்னை இ.சி.ஆர். சாலை ஒரு காலத்தில் ஒரு வழிச்சாலையாக இருந்தது. தற்போது விரிவாக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விபத்துக்கள் 95 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், சாலைகள் அகலப்படுத்தப்படுவதால்தான் விபத்துகள் குறைகின்றன என்று கூறினார்.

அதுபோல  சேலம் – சென்னை 8 வழிச்சாலை தமிழக வளர்ச்சிக்கு உதவும். மக்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள் தீட்டப்படுகின்றனவே தவிர, அரசாங்கத்தின் நன்மைக்காக எந்தவொரு திட்டமும் போடப்பட வில்லை.  சாலை அமைவதால்  மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதுகுறித்து  மாவட்ட நிர்வாகத்தில் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

தொடர்ந்து தமிழகத்தில் உடல்உறுப்பு தானத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்தியஅரசு கூறி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கமலின் டில்லி பயணம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,  கமல ஹாசனைப் பொறுத்தவரை யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவரது உரிமை. அமெரிக்க அதிபர் டொனார்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-ஐயும் சந்திக்கலாம் என்றும்  நக்கலாக கூறினார்.