கமல் – மய்யம்: முப்பது வருட பந்தம்

 

சென்னை:

ன்று மதுரையில் நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டில், தனது கட்சியின் பெயர், மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்திருக்கிறார் கமல்.

மய்யம் என்ற வார்த்தை பலரையும் ஈர்த்திருக்கிறது. பொதுவாக தமிழகத்தில்.. மாநில கட்சிக்கு, “கழகம்” என்று  பெயர் வைப்பதுதான் வழக்கம். பா.ம.க., வி.சி.க. போன்ற சில விதிவிலக்குகள் உண்டு.

ஆனால் கட்சி பெயரில் “மய்யம்” என்ற வார்த்தையை கமல் பயன்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தவிர “மையம்” என்பதே சரி என்று வாதிடுவோரும் உண்டு.

“மய்யம்” என்பது பெரியார் பாணி. பெரியாரும் அவரது தொண்டர்களும் தான், “ஐ”க்கு பதிலாக “அய்” என்று பயன்படுத்துவார்கள். அய்யம், அய்யப்பன் என்று எழுதுவார்கள். அதே பாணியை கமலும் பின்பற்றி வருகிறார்.

அது இன்று நேற்றல்ல.. கடந்த முப்பது வருடங்களாகவே இதே பாணியைத்தான் கமல் பின்பற்றி வருகிறார்.

எண்பதுகளின் இறுதியில் தனது ரசிகர் மன்றத்தினருக்காக கமல் துவங்கிய பத்திரிகையின் பெயர், “மய்யம்”. அது வழக்கமான ரசிகர் மன்ற இதழாக இல்லாமல், இலக்கிய கட்டுரைகள், அறிவியல் சார்ந்த விசயங்கள் என்று வாசகரின் (ரசிகரின்) தரத்தை உயர்த்துவதாக இருந்தது.   தவிர அப்போதே, “மய்யம்” என்ற பெயர் பேசுபொருள் ஆனது.

அந்த இதழ் சில வருடங்களில் நிறுத்தப்பட்டது.

ஆனாலும் கமலின் இதயத்தில் “மய்யம்” மையம்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் மய்யம் இதழை, இணைய இதழாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார் கமல். கடந்த 2010ம் ஆண்டு, இதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

இந்த இதழுக்காக பேராசிரியர் தொ.பரமசிவன், எழுத்தாளர் நீல பத்மநாபன் ஆகியோருடன்   ஆலோசனை நடத்தினார். நெருங்கிய நண்பர்களான வசனகர்த்தா கிரேஸி மோகன், தமிழறிஞர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் இரா.முருகன் மற்றும் நடிகை கௌதமி ஆகியோர் கொண்ட குழு மய்யம் இணைய தள வடிவமைப்பையும், செயல்திட்டத்தையும் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார்கள்.

ஆனால் ஏனோ அந்த முயற்சியும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இப்படி கடந்த 30 ஆண்டுகளாக கமலுடன் தொடர்ந்து பயணித்த “மய்யம்” தற்போது கட்சியின் பெயரில் இணைந்திருக்கிறது.  இனி கட்சி இதழாக “மய்யம்” உருவாகக்கூடும்.