மத்திய பிரதேசத்தின் முதல்வராகிறார் கமல்நாத்..!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

kamalnath

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஆளும் கட்சியான பாஜகவும், கங்கிரஸூம் அனல்பறக்கம் பிரச்சாராம் மேற்கொண்டனர். தேர்தல் முடிவுகள் நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்டது.

பெரிதும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான தேர்தல் முடிவுகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையுமே அளித்தன. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த முடிவுகள் பாஜக அரசின் பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தன.

kamalnathcm

இதையடுத்து காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற 3 மாநிலங்களில் முதல்வர்களை நியமிப்பதில் குழப்பம் நீடித்தது. மூத்த தலைவர்களும், முன்னாள் முதல்வர்களும் தற்போதைய முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டனர். இறுதியாக முதல்வர்களை தேர்வு செய்யும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி முதல்வர்களை தேர்வு செய்ய ராகுல் காந்தி ’சக்தி’ என்ற மொபைல் ஆப் மூலம் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதனிடையே மத்தியபிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதிய சிந்தியா மற்றும் திக்விஜய் சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் திக்விஜய் சிங், கமல்நாத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து, முதல்வர் பதவிக்கு கமல்நாத்திற்கு, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கும் இடையே போட்டி நிலவியது.

இந்நிலையில் இன்று போபாலில் கங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசத்தின் முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கமல்நாத் மத்தியபிரதேசத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவு உறுதி செய்துள்ளது.