மோடி பேண்ட் போட கற்கும் முன்பே நேருவும் இந்திராவும் முப்படைகளை கட்டமைத்துவிட்டனர்: முதல்வர் கமல்நாத்

புதுடெல்லி:

மோடி பேண்ட் போட கற்கும் முன்பே, நேருவும் இந்திராவும் முப்படைகளை கட்டமைத்துவிட்டார்கள் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டம் ஹர்சுத் என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் கமல்நாத், மோடி…நீங்கள் பைஜாமாவையும், பேண்டையும் போட கற்கும் முன்பே நேருவும் இந்திராவும் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படையை கட்டமைத்துவிட்டார்கள்.

உங்கள் கட்டுப்பாட்டில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் போதுதான் பெருமளவு தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

நாட்டின் பாதுகாப்பு பற்றி மோடி பேசுகிறார். யார் ஆட்சியில் அதிகளவு தீவிரவாத தாக்குதல் நடந்தது. பாஜக ஆட்சியிலேயே அதிக அளவு தீவிரவாத தாக்குதல் நடந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவும் பிரதமர் மோடியும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தேசிய பாதுகாப்பையும், புல்வாமா தாக்குதலையும், விமான தாக்குதலையும் சொல்லி வருகின்றனர்.

கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வருவோம் என்றும், வேலை வாய்ப்பை பெருக்குவோம் என்றும் பிரதமர் மோடி கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார்.