மத்தியபிரதேச முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றார்! ராகுல் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

டில்லி:

15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு சாவுமணி அடித்துள்ள காங்கிரஸ், மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும்  ஆட்சியை கைப்பற்றியது.

மாநில முதல்வர் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்  தேர்வான நிலையில், இன்று முதல்வராக பதவி ஏற்றார். மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

300 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில், 114 இடங்களை  பிடித்த காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளது.

மாநில தலைநகர் போபாலில் உள்ள ஜம்பூரி திடலில்   நடைபெற்ற விழாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக் கொண்டார். அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் அவருக்கும் இதர மந்திரிகளுக் கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

கமல்நாத் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்தியப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி,  ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்ற அசோக் கெலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட், பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் திக்விஜய சிங், மல்லிகார் ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.