மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு நீதி இல்லையா?  கமல்நாத் கேள்வி

மத்திய பிரதேசம்:
த்திய பிரதேச மாநிலத்தில் பல ஆண்களால் ஒரு பெண் தாக்கப்படும் காணொளி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. இந்தக் காணொளிக் காட்சியை பகிர்ந்த முன்னாள் முதலமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது என்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆளும் பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
கமல்நாத் பகிர்ந்த அந்த காணொளி காட்சியில், ஒரு பெண் பல ஆண்களால் தாக்கப்படுகின்றார், மேலும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் மற்றொரு பெண் தனது தாயை விட்டுவிடுமாறு கதறுகிறார்.  இதுகுறித்து புகாரளித்து 5 நாட்கள் ஆன நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள் என்றும் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிவராஜ் சிங் சவுகான் அரசில் பெண்களுக்கு நீதி இல்லையா என்றும், பெண்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கிறார்கள், இதுதான் தங்கள் பாஜக அரசின் நியாயமா என்றும், அந்தப் பெண்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும் கமல்நாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மற்றொரு காணொலி காட்சியில் வீட்டிற்கு முன்னால் குப்பை அள்ளுவது குறித்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்று மூத்த காவல்துறை அதிகாரி சிமலா பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.