மத்திய பிரதேச முதல்வராக 17ந்தேதி பதவி ஏற்கிறார் கமல்நாத்

போபால்:

த்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் வரும் 17ந்தேதி (திங்கட்கிழமை) பதவி ஏற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

15ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வீறுகொண்டு எழுந்து ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரசுக்கு தோற்கொடுக்க  பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி மற்றும் சுயேட்சைகள் முன்வந்துள்ளனர்.

இதன் காரணமாக ம.பி.யில் காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ம.பி. முதல்வர் பதவிக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் ஆகிய இருவரில் யார் என்று கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்,  காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தி வந்தது. இறுதியில் மாநில முதல்வராக  கமல்நாத் முதல்வராக பதவி ஏற்க ஆதரவு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக போபால் திரும்பிய கமல்நாத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்று  காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கமல் நாத் தேர்வு செய்யப்பட்டார்.

அதையடுத்து இன்று  மத்தியபிரதேச ஆளுநரை சந்தித்து கமல் நாத் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு வரும் திங்களன்று (17ந்தேதி)  கமல்நாத் மத்திய பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருடன் காங்கிரஸ் அமைச்சரவையும் பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ம.பி. தலைநகர் போபாலில் உள்ள லால் பரேடு மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

யார் இந்த கமல்நாத்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்,  1946ம் ஆண்டு கான்பூரில் பிறந்தார். த் கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்து வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 1980ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்,  1996, 1997ஆகிய இருமுறை தவிரத் தொடர்ந்து சிந்த்வாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

நரசிம்மராவ் ஆட்சியில் 1991முதல் 1995 வரை மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சராகப் பணியாற்றினார். 1995முதல் -1996வரை மத்தியத் ஜவுளித்துறை இணையமைச்சராக இருந்தார்.

மன்மோகன் சிங் ஆட்சியில் 2004 முதல் 2009வரை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.

மன்மோகன் சிங்கின் இரண்டாவது பதவிக்காலத்தில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.

கடந்த மேமாதத்தில் மத்தியப் பிரதேசக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.