சென்னை :

நாளை திருச்சியில் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கமல்ஹாசன் இன்று மதியம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் துவக்கினார். மதுரையில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்போது  பேசிய கமலஹாசன், நேர்மையான ஊழலற்ற ஆட்சியை அமைப்பதே தனது நோக்கம் என்றுறும் ஊழலை ஒழிப்பதற்காக மக்கள் கரம் கோர்க்க வேண்டும் என்றும்  தெரிவித்தார்.

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்ரல் 4ம் தேதி நடக்கவுள்ளதாகவும் அறிவித்தார். அதன்படி, நாளை திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில்   பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து இன்று மதியம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கமல்ஹாசன் திருச்சி கிளம்பிச் சென்றார்.

முன்னதாக ரயிலில் செல்லும் வழியில் தாம்பரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் ஆகிய இடங்களில் இறங்கி, மக்களைச் சந்திக்க கமல் திட்டமிருந்தார். அதற்கு  ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில், திருச்சியில் நாளை மாலை நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியலும், பல முக்கிய கொள்கைகள் குறித்து அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.