பெரியாருக்கு சிலை அமைக்கும் கமல் மன்றத்தினர்!  தொடரும் கமலரசியல்?

சிறப்புச் செய்தி:

ரபரப்பாக அரசியல் ட்விட்டுகளை வீசியதோடு, ஆளுங்கட்சியை மிரளவைத்து, “அரசியலுக்கு வந்துவிட்டேன்.. கட்சி துவங்க நிதி வசூல் செய்வேன்” என்று அறிவித்து,… தவறு செய்வோர்  குறித்து புகார் செய்ய விசில் என்ற ஆப்  அறிமுகப்படுத்தி, கொசஸ்தலை ஆற்றை ஆய்வு செய்து…  அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார் நடிகர் கமல்ஹாசன்.

கமல்

ஆனால் சமீபமாய் அவரைக் காணவில்லை. குமரி புயல், ஆர்.கே. நகர் தேர்தல்.. எதற்கும் கருத்து தெரிவிக்கவில்லை கமல்.

“அவரது அரசியல் திட்டம் என்ன ஆனது..” என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இது குறித்து விசாரிக்கையில், “விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிந்துவிட்டது. டப்பிங், எடிட்டிங் பணிகளும் முடிந்துவிட்டன. தற்போது அப்படத்தின் பிஜிஎம் பணியை அமெரிக்காவில் செய்துகொண்டிருக்கிறார் கமல்” என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

“அப்படியானால் கமலின் அரசியல் பிரவேசம்?”  என்ற கேள்வியோடு அவரது மன்ற வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தமிழகம் முழுதும் பொதுநலப் பணிகளில் மன்றத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினம் தினம் ஏதோ சில ஊர்களில் மன்றத்தினரின் சமூகநலப்பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது” என்கிறார்கள் கமல் நற்பணி மன்றத்தினர்.

“ஓகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோதும் கமல் கருத்து ஏதும் வெளியிடவில்லையே…” என்ற கேள்விக்கு,  “ட்விட் அல்லது அறிக்கை விடுவதைவிட,  புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதே முக்கியம். களத்தில் இறங்குங்கள் என்று கமல் ஆணையிட்டார் கமல்” என்கிறார்கள் கமல் மன்றத்தினர்.

தங்கவேலு

இதே கருத்தை பிரதிபலிக்கிறார் கமல் நற்பணி மன்ற அகில இந்திய பொறுப்பாளர் தங்கவேலு. “புயல் பாதிக்கப்பட்ட குமரி பகுதியில் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் செய்வது என்று கமல் மன்றத்தினர் களம் இறங்கினார்கள்” என்கிறார்.

மேலும், “தற்போது காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதுதான் முக்கியமான பணி. அதை அரசு நிர்வாகம்தான் செய்ய முடியும்.  இந்த வேலையில் நிவாரண பணிகளில் ஈடுபடுவது சரியாக இருக்காது. ஆகவே ஜனவரி 28ம் தேதி பெரிய அளவில் மருத்துவ முகாம், நல உதவித்திட்டங்கள் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்கிறார் தங்கவேலு.கடலூர் நிகழ்வு

அதே போல கடலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பல சமூக பணிகளை செய்துவருகிறார்கள் கமல் மன்றத்தினர். இது குறித்து கடலூர் மாவட்ட கமல் மன்ற தலைவர் மூர்த்தி தெரிவிக்கும்போது, “வழக்கம் போல பொதுப் பணிகளை செய்து வருகிறோம். சமீபத்தில்கூட மருத்துவமுகாம். கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தினோம்” என்கிறார்.

மூர்த்தி

அதே போல மத்திய சென்னை மன்ற பொறுப்பாளர் குமணன், ”சில நாட்களுக்கு முன் பெரிய அளவில்  மருத்துவமுகாம் நடத்தினோம்” என்கிறார்.

அதே போல அகில இந்திய மன்ற பொறுப்பாளர் தங்கவேலு, “நாளை ஒரு நாள் எனது பயணத்திட்டத்தைப் பார்த்தாலே எங்கள் மன்றப்பணிகள் விளங்கும்.  காலை எட்டு மணிக்கு ஈரோடு புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் உதவிகள் வழங்குகிறோம்.  ஒன்பது மணிக்கு

 

சென்னை நிகழ்வு

சத்தியமங்கலத்தில் ரத்த தானமுகாம்.  பத்து மணிக்கு கோபியில் மருத்துவ முகாம் மற்றும் நல உதவிகள்.  பதினோரு மணிக்கு பவானியில் நல உதவிகள், மதியம் 12 சேலத்தில் காலை முதல் நடைபெறும் மருத்துவமுகாமில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் அளிக்கிறேன். மாலையில் வேலூர் காட்பாடியில் நல உதவி நிகழ்ச்சி.. இப்படி நாளை ஒரு நாளிலேயே நிறைய சமூகநலப்பணிகளை செய்கிறோம். கிட்டதட்ட தினமும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழகம் முழுதும் நடைபெறுகின்றன” என்கிறார் தங்கவேலு.

“இவை எல்லாமே வழக்கமாக மன்றத்தினர் செய்யும் சமூகசேவைகள்தானே.. அரசியல் ரீதியாக என்ன செய்து வருகிறீர்கள்? முட்டை விநியோகத்தில் ஊழல் என்று புதுக்கோட்டை மன்றத்தினர் புகார் தெரிவித்தனர். அது போல ஊழலை அம்பலப்படுத்துவதாக அல்லது அரசியல் ரீதியான பணிகள் ஏதும் செய்ததாக தெரியவில்லையே” என்று கேட்டோம்.

ஹரி கிருஷ்ணன்

அதற்கு, “அரசியல் ரீதியான பணிகள் என்பது கமலின் நேரடி வழிகாட்டலில் நடக்கும். அவர்தான் கேப்டன். அதே நேரம், ஊழல் குறித்த விவரங்களை தொடர்ந்து திரட்டி வருகிறோம். வரும் ஜனவரியில் விசில் ஆப் செயல்படத்துவங்கிவிடும். அதன் பிறகு எங்களது வீச்சை அனைவரும் தெரிந்துகொள்வார்கள்” என்கிறார்கள்.

கமல் மன்ற அகில இந்திய பொறுப்பாளர் தங்கவேலு, “அமெரிக்காவில் படப்பணியில் இருந்தாலும் மன்றத்தினரின் செயல்பாடுகளை கமல்தான் வழிநடத்தி வருகிறார். அவரது வழிகாட்டலில்தான் மன்றத்தினர் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குள்ள செயல்பாடுகள் அனைத்தும் உடனுக்குடன் அவருக்கு தெரிவிக்கப்படுகின்றன” என்கிறார்.

இந்த நேரத்தில் புதுச்சேரி மாநில கமல் மன்றத்தினரின் ஒரு செயல், அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுகையில் தந்தை பெரியார் சிலையை திறக்க இருக்கிறார்கள் அம்மாநில கமல் நற்பணி மன்றத்தினர்.

இது குறித்து பேசும் புதுவை மாநில பொறுப்பாளர் ஹரி கிருஷ்ணன், “தந்தை பெரியார்தான் தமிழர்களின் வழிகாட்டி. அவரை கடவுள் மறுப்பாளராக மட்டும் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அனைருக்கும் கல்வி, பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு என்று  சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பெரியார். ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை பெற்றுத்தந்தவர் பெரியார்.

அதே நேரம் இன்னும் அவரது பாதையில் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதைநோக்கிச் செல்ல உத்வேகம் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு அடையாளமாகத்தான் பெரியார் சிலையை திறக்கிறோம்” என்கிறார் ஹரிகிருஷ்ணன்.

பெரியார் சிலை திறப்பு அறிவிப்பு

மேலும், “கோயில் வாசலில் 24 மணி நேரமும் பிச்சை எடுப்பவனுக்கு கடவுள் உதவட்டும்…  கோயிலை பூட்டாமல்.. உண்டியலை பூட்டாமல் வைத்திருங்கள்.. நானும் கோயிலுக்கு வருகிறேன் என்றார் கமல். இது கடவுள் மறுப்பு என்கிற கோணத்தில் மட்டும் சொல்லப்பட்டதல்ல… மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு  அவர் சொன்னது. அதைத்தான் நாங்கள் கடைபிடிக்கிறோம்” என்கிறார் ஹரிகிருஷ்ணன்.

“இது அரசியல் ரீதியான நிகழ்ச்சியாக இருக்குமோ “ என்றால், “நிச்சயமாக இல்லை. பெரியார் சிலையை திறந்துவைப்பவர் முதலியார் பேட்டை எம்.எல்.ஏ. பாஸ்கர். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரை அழைத்திருக்கிறோம். அரசியல் என்பது கமலின் நேரடி வழிகாட்டலில் நடக்கும்.” என்கிறார்.

“சிலை திறப்பு குறித்து கமலுக்கு தகவல் தெரியுமா” என்றால், “அவருக்குத் தெரியாமல் மன்றத்தில் அணுவும் அசையாது. பெரியார் சிலை திறப்புக்கு கமலைத்தான் அழைத்தோம். எங்களது முயற்சியை மிகவும் பாராட்டினார். அதே நேரம், அந்த நேரத்தில் தான் இந்தியாவில் இருக்க மாட்டேன். நீங்கள் நிகழ்ச்சியை நடத்துங்கள். பிறகொரு நாள் வருகிறேன் என்றார்.

தனது சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளை மனதுக்குள் ஏந்திக்கொண்டவர் எங்கள் தலைவரான கமல்.  வெறும் வாய்ப்பேச்சாக இல்லாமல் அனுதினமும் பெரியார் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர் அழர்.  அதனால், அவரது ரசிகர்களான நாங்களும் பெரியாரை  மாபெரும்  தலைவராகக் கொண்டாட இருக்கிறோம். அதற்கான தொடக்கமாகத்தான், புதுவையில் பெரியார் சிலை திறப்பு” என்கிறார் ஹரி கிருஷ்ணன்.

தங்கவேலுவும் இதே கருத்தைச் சொல்கிறார். மேலும், “இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து கமல் வருகிறார். அடுத்த மாதம் விசில் ஆப் இயங்கத் துவங்கிவிடும். அதன் பிறகு எங்களது அரசியல் வேகத்தைப் பாருங்கள்”என்கிறார் உற்சாகமாக.

ஆக, கமல் ஊரில் இல்லாவிட்டாலும், ட்விட்டுகள் இல்லாவிட்டாலும் “கமலரசியல்” இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kamal political move continues..., Setup Periyar statue by Kamal fans, பெரியாருக்கு சிலை அமைக்கும் கமல் மன்றத்தினர்!  தொடரும் கமலரசியல்!
-=-