ரஜினி, கமலுக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது! நடிகர் விஜய் வசந்த் மாஸ்…

சென்னை: ரஜினி, கமலுக்கு வரும் கூட்டம்,  ஓட்டாக மாறாது என நடிகரும், மறைந்த குமரி மாவட்ட எம்.பி.யுமான விஜய் வசந்த் அதிரடியாக கருத்து தெரிவித்து உள்ளார்.

நடிகர்கள் தங்களது ஓய்வுகாலங்களில் அரசியலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அதுபோல, நடிகர் ரஜினியும் ஜனவரியில் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். கட்சியை தொடங்கும் நடிகர்கள் அனைவரும், தாங்கள் தமிழ்நாட்டில் முதல்வராக வந்துவிடுவோம் என்று கனவில் மிதக்கின்றனர்.

இந்த நிலையில், மறைந்த குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எச்.வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய்வசந்த் , ரஜினி, கமலுக்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்று அதிரடியாக கூறி உள்ளார்.

குமரி மாவட்ட தொகுதியில், தந்தையைப் போலவே தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு  நலத்ததிட்ட உதவிகள் செய்து வரும் விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள்  நடிகர்களின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த விஜய் வசந்தத், நடிகர்களை பார்க்க கூட்டம் கூடுவது வழக்கமானது. அதுபோல, ரஜினி, கமல் வரும்போது அவர்களை பார்க்க வேண்டும் என்று தான் கூட்டம் கூடுகிறதே தவிர,  அது ஓட்டாக மாறாது என்று அதிரடியாக தெரிவித்தார். மேலும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை என்றும் கூறினார்.

விஜய்வசந்த்,  தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து  கடிதம் கொடுத்துள்ளார்.  ஆனால், கட்சி மேலிடம் இதுவரை எந்த  பதிலும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், தந்தையின் பாணியிலேயே தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.