திமுக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணியா? – கமல் விளக்கம்

நடிகர் கமல்ஹாசன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மைய்யம் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

kamal

திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நாளை அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தோழமை கட்சிகள், திரைப்பிரபலங்கள், திமுக நிர்வாகிகள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளது.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் கமல், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியுடன் இணைவது குறித்து ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலினுடன் பேசுவார் என்ற தகவல் வெளியானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதமாக வதந்திகளை நம்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில், “மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நாளைநமதே ” என குறிப்பிட்டுள்ளார்.