இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்டமாக இந்திப் படம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, நடிகர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்.இந்தப் படத்தில் கபில்தேவ் மகள் அமியா தேவ் (Amiya) உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜனவரி 25) நடைபெற்றது.

இந்த விழாவில் கமல் பேசும் போது, ” 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது மட்டுமே நமக்கு தெரியும். இயக்குநர் கபீர்கான் அதன் பின்னால் இருக்கும் அறியப்படாத கதைகள் குறித்துச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது.

எத்தனை கஷ்டங்களைத் தாண்டி உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்கள், ‘அவெஞ்சர்ஸ்’ கதையை விட இது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை .

கபில்தேவ் அவர்களுக்கான உண்மையான பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை அவர் அதற்கு கவலைப்படவும் மாட்டார். ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். கிரிக்கெட்டர் ஶ்ரீகாந்தை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அது முடியாமல் போய்விட்டது. அவரை நண்பராகப் பல ஆண்டுகள் பழக்கம். இப்படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று பேசினார் கமல்