ரசியலை விமர்சிக்க வேண்டும் என்றால் முதலில் அரசியலுக்கு வரட்டும் என்று நடிகர் கமல்ஹாசனை  விமர்சித்தனர் தமிழக அமைச்சர்கள்.

இதற்கு கமல், “இந்தி எதிர்ப்புக்காக குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்துவிட்டேன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

ஆமாம்.. அரசியல் குறித்த அறச் சீற்றம் கமலுக்கு உண்டுதான்.

அவரது சத்யா, மகாநதி உள்ளிட்ட சில படங்களில் அரசியல் குறித்த தனது பார்வையை நேர்மையுடன் பதிவு செய்திருப்பார்.

ஆனால் அரசியல் மீதான தனது கோபத்தை கமல் நிஜத்தில் வெளிப்படுத்தியதில்லை என்றே பலரும் நினைக்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக இரு சம்பவங்களைச் சொல்வது உண்டு.

அது ஒரு தேர்தல் காலம். சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.  அப்போதைய ஆளுங்கட்சி, தங்களுக்காக கமல்  பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

 

கமல் மென்மையாக மறுத்தார். ஆளுங்கட்சியின் கோரிக்கை, வற்புறுத்தலாக மாறியது. கமல் அப்போதும் இடம் வலமாக தலையசைக்கவே…  வற்புறுத்தல்  வலியுறுத்தலானது.

பதிலுக்கு கமல் ஆத்திரத்தை வெளிக்காட்டவில்லை. என்னை ஏன் டார்ச்சர் செய்கிறீர்கள் என்று கோபப்படவில்லை.

சத்தமின்றி வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார். பிரச்சாரம் முடிந்த பிறகு, வாக்களிக்கும் நேரத்தில் திரும்பி வந்தார்.

இன்னொரு உதாரணத்தையும் சொல்வார்கள்.

கமலின் விஸ்வரூபம் படத்துக்கு அப்போதைய தற்போதைய ஆளுங்கட்சியால் பிரச்சினை. அப்போது ஆளுங்கட்சிக்கு தலைமை ஏற்றிருந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என்று சொல்லப்பட்ட… (அவர் மறுக்கவும் செய்த) ஜெயா டிவிக்கு, விஸ்வரூபம் திரைப்படத்தின் உரிமையை கேட்டதாகவும், கமல் மறுத்ததாகவும், அதனால் அப்பட ரீலீஸில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

இஸ்லாமிய அமைப்புகள் சில அப்படத்துக்கு எதிராக கொடிபிடித்தாலும், ஆளுங்கட்சியின் அணுசரணை இல்லாததாலேயே படம் வெளியாவதில் சிக்கல் என்று பேசப்பட்டது.

அப்போதுகூட கமல் கோபப்படவில்லை.. வருத்தம்தான் பட்டார். “படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் நாட்டை விட்டே போகிறேன்” என்றுதான் கதறினார்.

ஆனால் கமல் ஆத்திரப்பட்டது.. அதாவது அறச் சீற்றம் கொண்டதும் உண்டு.

அதுவும் பிரதமரையே முகத்துக்கு நேராக கேட்டவர் அவர்..

அந்த சம்பவம்…

(அடுத்த அத்தியாயத்தில்)