5 மாநில தேர்தல் முடிவுகள்: ”புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்” – கமல்ஹாசன் ட்வீட்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் “ புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம், மக்கள் தீர்ப்பு இது “ என தெரிவித்துள்ளார்.

kamal

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக போட்டியின.

இந்நிலையில் இன்று ஐந்து மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த வருடம் பிரதமர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஐந்து மாநில தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒரு மாநிலத்தை கூட பாஜக தக்க வைத்துக் கொள்ளாதது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்ந்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், “ புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம், மக்கள் தீர்ப்பு இது “ என பதிவிட்டுள்ளார். பாஜக-வின் ஆட்சிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் கமல்ஹாசன். திரைப்பட தணிக்கை வாரியம் உட்பட தன்னாட்சி அமைப்புகளுக்கு பாஜக அச்சுறுத்தலாகி வருவதாக கமல்ஹாசன் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.