மழையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரிக்கும் கமலா ஹாரிஸ்! வைரலாகும் வீடியோ..

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தின் போது, மழையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்பே மீண்டும் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதுபோல துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.  குடியரசு கட்சிக்கு இந்தியர்களிடையே பெரும் செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில், கமலாஹாரிசுக்கும், மக்கள் மத்தியில்  நல்ல செல்வாக்கு உள்ளது. அவர் தேர்தலில் வெற்றி கண்டால், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி, முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி, முதல் இந்திய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி, முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி போன்ற பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராவார்.
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், அங்கு அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.   கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இருந்தாலும் கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக்கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்துள்ளார். அச்சமயத்தில் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த கூடிய வகையில் குடையைப் பிடித்தபடி மலையில் நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.