டில்லி

மெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஒரு நல்ல மனம்  கொண்ட பெண் என அவருடைய தாய்மாமன் கோபாலன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அதிபர் வேட்பாளர் ஜோ பிடனால் அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். இவர் தாய் வழி பாட்டனார் கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.  கமலாவின் தாய் சியாமளா கோபாலன் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் மற்றும் உரிமைகள் ஆர்வலர் ஆவர்.

சியாமளாவின் சகோதரர் மற்றும் கமலாவின் தாய் மாமன் பாலச்சந்திரன் கோபாலன் அமெரிக்காவில் கல்வி  பயின்றவர் ஆவார்  தற்போது டில்லியில் வசித்து வரும் கல்வியாளரான பாலசந்திரன் வீட்டில் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.  சொல்லப் போனால் நேற்று முதல் அவர் வீட்டு தொலைப்பேசி இடைவிடாமல் ஒலித்துக் கொண்டு உள்ளது.

சியாமளா மற்றும் பாலசந்திரனின் தந்தை கோபாலன், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா  வந்த அகதிகள் நலனுக்காகப் பணி புரிந்துள்ளார்.  அதன் பிறகுத் தனது அனுபவம் காரணமாக ஜாம்பியா அரசுக்கு ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார்.   கோபாலனின் மனைவி ராஜம் தனது சமூக சேவை மூலம் மிகவும் புகழ் பெற்றவர் ஆவார்.

கமலா ஹாரிஸ் குறித்து பாலச்சந்திரன், “கமலா ஒரு நல்ல மனமும் இரக்கமும் கொண்ட பெண் ஆவார். அவருடைய சமூக சேவைகள் மூலம் இந்த உயரத்தை எட்டி உள்ளார்.  கலிஃபோர்னியாவில் அவர் அட்டர்னி ஜனரல் பதவி வகித்த போது மரண தண்டனைக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் எனத் தீர்மானம் எடுத்தார்.  மனித உரிமைகள் குறித்து அவர் செய்துள்ள பணிகள் அவரது மனித நேயத்தை  எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அதே வேளையில் கமலா தனது கட்சியின் கொள்கைப்படி இந்திய அரசின் பல நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.  குறிப்பாகக் காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டம், டில்லி கலவரம் போன்றவற்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குற்ப்பிடத்தக்கவை ஆகும்.  அத்துடன் பிரமிளா ஜெயபால் விவகாரத்தில் தனது வலுவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் என்றும் தனது வேர் இந்தியாவில் உள்ளதை மறந்தவர் இல்லை. அவர் அடிக்கடி சென்னை வருவார்.  அத்துடன் கர்நாடக சங்கீதத்தில் தங்கப்பதக்கம் பெற்றவரின் மகள் என்பதையும் அவர் பெருமையுடன் குறிப்பிடுவார்.

தனது பாட்டனார் கோபாலன் உடன்  அவர் மரணம் அடைந்த 1998 வரை அடிக்கடி கடிதம் மற்றும் தொலைப்பேசி மூலம் பேசிக் கொண்டிருந்தார்.   முக்கியமாகத் தனது தாய் சியாமளா 2009 ஆம் வருடம் மரணம் அடைந்த போது அவரது அஸ்தியை வங்காளக்கடலில் கரைக்க இந்தியா வந்திருந்தார்” என பெருமிதத்துடன் கூறி உள்ளார்.