கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் வரலாறு கொண்ட இன்றைய நவீன முதலாளித்துவ அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக அமர வேண்டுமென ஆசைப்பட்டவர் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன். ஆனால், நிறைவேறாத அவரின் ஆசையை, அதே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலமாக, பாதியளவு நிறைவேற்றியுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக 1993 முதல் 2001 வரை பதவி வகித்த பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், நியூயார்க் மாகாண செனட்டராக நீண்டகாலம் பதவி வகித்தவர். தன் கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டபோதும், அவரைப் பிரியாமல் அவருடனேயே நின்றவர்.

ஜார்ஜ் புஷ் ஜூனியரின் பதவிகாலம் முடிவடைந்த 2008 காலத்தில், அமெரிக்க அதிபராக ஆசைப்பட்டு, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆவதற்கு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுடன் மோதினார். ஆனால், உள்கட்சித் தேர்தலில் ஒபாமாவிடம் தோற்றுப்போனார்.

பின்னர், ஒபாமாவின் அரசிலேயே வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், அடுத்தமுறையும் அதிபர் வேட்பாளர் ரேஸில் நிற்க வேண்டுமென்பதற்காக அந்தப் பதவியில் அதிககாலம் நீடிக்க விரும்பவில்லை ஹிலாரி.

பின்னர், அவர் ஆசைப்பட்டதைப் போன்று, 2016 அதிபர் தேர்தலுக்காக, ஜனநாயகக் கட்சியின் உள்கட்சித் தேர்தலில் வென்று, அதிபர் வேட்பாளராக, குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டார். இவர்தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க, தேர்தலில் வென்றவரோ குடியரசுக் கட்சியின் டிரம்ப்.

அவ்வளவுதான், விரக்தியின் உச்சிக்கே சென்ற ஹிலாரி, அரசியலுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால், 2008ம் ஆண்டு அவர் உள்கட்சித் தேர்தலில் வென்று, ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராக போட்டியிட்டிருந்தால் வென்றிருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், நினைத்தது நடக்கவில்லை!

ஒருவேளை, 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றிப் பெற்றிருந்தால், அமெரிக்க சரித்திரத்தில் மற்றும் ஒரு வல்லரசு நாட்டில், கணவனும் மனைவியும் தலைமைப் பதவியில் அமர்ந்தவர்கள் என்ற அதிசய சாதனைப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஹிலாரி கொடுத்து வ‍ைத்தது அவ்வளவுதான் போலும்!

ஆனால், இப்போது அவரின் ஜனநாயகக் கட்சியையே சேர்ந்த ஒரு பெண்மணி, அமெரிக்காவின் துணை அதிபராக வென்றுள்ளார். அதாவது, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்! இதுவும் ஒரு சாதனையே!

அன்று ஹிலாரி ஆசைப்பட்டதை, இன்று பாதி நிறைவேற்றியுள்ளார் அவரின் கட்சியையே சார்ந்த மற்றொரு பெண்!