முதல்வரின் புயல் ஆய்வு தூரத்து பார்வையாக உள்ளது : கமலஹாசன் கருத்து

சென்னை

புயல் பாதிக்கப்பட்டதை முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் பார்த்தது தூரத்து பார்வையாக உள்ளதாக கமலஹாசன் கூறி உள்ளார்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் டெல்டா பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக கூறப்பட்டாலும் அந்த பகுதிகளின் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலம் பார்வை இட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “நிவாரணப் பணிகள் குறித்து மக்களுக்கு வரும் அதே கொபம் எனக்கும் வருகிறது. இந்த தருணத்தில் தீயை அணைப்பது போல் விறுவிறுப்பாக நடந்துக் கொள்ள வேண்டும். மக்களின் நிலையை நேரில் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

இந்த புயல் ஏழை, பணக்காரன் என வித்தியாசம் பார்க்காமல் அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது. அரசின் முன்னேச்சரிக்கை நடவடிக்கை சரியாக இருந்திருகலாம். அதையும் தாண்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சிமெண்டினால் செய்த போதிலும் சேதமடைந்ததற்கு சிமெண்டிலும் குறை இருந்திருக்கலாம். அரசின் வேகம் தற்போது போதாத நிலையில் உள்ளது.

முதல்வர் பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிப்பை பார்த்தது தூரத்து பார்வையாக உள்ளது. அவர் நேரில் பார்வை இட்டு இருக்க வேண்டும். நமது பிரதமர் மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு இங்கு வந்து பார்வை இட வேண்டும். அவர் அவ்வாறு வந்து பார்வை இட்டால் அரசு சக்கரம் நிச்சயம் வேகமாக சுழலும்” என கூறி உள்ளார்.