கிரேசி மோகன் மரணம் : கமலஹாசனின் மனதை உருக்கும் கடிதம்

சென்னை

பிரபல கதாசிரியரும் நடிகருமான கிரேசி மோகன் மறைவால் நடிகர் கமலஹாசன் கடும் சோகம் அடைந்துள்ளார்

பிரபல நகைச்சுவை கதாசிரியரும் நடிகருமான கிரேசி மோகனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் இன்று நெஞ்சு வலி காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரசிகர்களுக்கு அது அதிர்ச்சியை அளித்தது. சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் சுமார் 2 மணிக்கு மரணம் அடைந்த செய்தி திரையுலகை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

கிரேசி மோகனின் கலைப் பயணத்தில் முக்கிய பங்கு நடிகர் கமலஹாசனுக்கு உண்டு. அவருடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் வசனம் எழுதிய கிரேசி மோகன் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, தெனாலி, பஞ்ச தந்திரம், காதலா காதலா, அவ்வை சண்முகி, வசூல் ராஜா எம் பி பி எஸ், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல படங்களில் வசனம் எழுதி உள்ளார். பல படங்களில் அவர் கமலுடன் நடித்துள்ளார்.

அவருடைய மறைவால் கமலஹாசன் மிகவும் சோகம் அடைந்துள்ளார். அதை ஒட்டி அவர் தனது டிவிட்டரில் ஒரு கடிதம் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில்,

நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

‘கிரேசி’ என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி.

அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னை காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை.

பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்கட்டியவர்.

அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கை வைத்து பிரியாவிடை கொடுத்தோம்.

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன?

மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும். அந்த வாழ்விற்கு நாண்டும் துணையிருப்பேன்.

அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக் குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது.

இந்த இழப்பை தாங்கிக் கொள்ள வர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்.

அன்புடன்

கமலஹாசன்

என குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி