சென்னை

ந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த கிரேன் விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனிடம் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள ஈ வி பி பிலிம் சிடியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிபு நடந்து வந்தது.  அப்போது கடந்த 19 ஆம் தேதி நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடந்தது.

இந்த படப்பிடிப்புக்கு அரங்கம் அமைத்த நிர்வாகிகள் கிரேன் உரிமையாளர், அதை இயக்கியவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.  சென்னை காவல் ஆணையர் இந்த விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.  தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த படத்தின் இயக்குநர் சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் கடந்த மாதம் 27ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.   இன்று இப்படத்தின் நாயகன் கமலஹாசன் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது..  அதையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு கமலஹாசன் வந்துள்ளார்.  துணை ஆணையர் நாகஜோதி அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.