சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதியோ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவது இல்லை. அதே நேரத்தில் வங்கக்கடலில் சென்னை அருகே பன்னாட்டு நிறுவன கப்பல்கள் மீன்பிடிப்பதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் தற்போது விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உள்ளதால், மார்ச் முதல் ஏப்ரல் 15 வரை தமிழகத்தில் பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் உட்பட அனைத்திற்கும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருத்தது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் சுழற்சி முறையில் சமூக விலகலை கடைபிடித்து மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பைபர் படகுகளின் மூலம் மீன்பிடிக்க சென்ற போது மயிலாப்பூர் நொச்சிக் குப்பத்திலிருந்து நேர் கிழக்கே பன்னாட்டு வர்த்தக கப்பல்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்துள்ளார். அவரது தமது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.